பக்கம்:சோழர் வரலாறு.pdf/245

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
243
 

 இராசேந்திர சோழ விண்ணகர்க்கு நிலதானம் செய்துள்ளான்[1]. இப்பேரரசன் ஒப்புயர்வற்ற நிலையில் அரசாண்டு கி.பி.1044-இல் விண்ணக வாழ்வை விழைந்தான்.


7. இராசேந்திரன் மக்கள்
(கி.பி. 1044 - 1070)

முன்னுரை: பேரரசன் இராசேந்திர சோழர்க்குப் பின் அவன் மக்கள் மூவரும் அடுத்தடுத்து அரசராயினர். தங்கள் ஆட்சிக்காலத்தில் தந்தை விட்ட பேரரசை நிலை நிறுத்தி ஆண்டனர்; அதனை நிலைநிறுத்தப் பல போர்கள் செய்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மேலைச் சாளுக்கியருடன் நடத்திய போர்களே ஆகும். கொடிய போர் ஒன்றின் இடையில் இராசாதிராசன் கொல்லப்பட்டான். உடனே சோழர் படை தளர்ந்தது. அவ்வமயம் பின் இருந்த இராசேந்திரசோழ தேவன் (இராசாதிராசன் தம்பி) அப்போர்க்களத்திற்றானே முடிசூடி வீராவேசத்துடன் போராடிப் போரை வென்றான். இங்ஙணம் நடைபெற்ற வடநாட்டுப் போர்கள் ஒரு பாலாகத் தெற்கே இலங்கை அரசன், பாண்டியன்,சேரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து தத்தம் சுயாட்சியை நிலைநிறுத்தக் கலகம் விளைத்தனர். இத்தகைய குழப்ப நிலைகளை இம்மக்கள் மூவரும் அவ்வப்போது அடக்கிப் பேரரசு நிலை தளராதவாறு பாதுகாத்தனர்; இறுதியில் கீழைச் சாளுக்கியர் உதவியையும் பேரரசின் பலத்துடன் கலந்து பின்னும் ஒரு நூற்றாண்டு சோழப் பேரரசு நிலைத்திருக்க வழிதேடினர்; அஃதாவது சாளுக்கிய சோழ இராசேந்திரன் எனப்பட்ட முதற் குலோத்துங்கன் சோழப் பேரரசைப் பெறச் செய்தனர்.


  1. 112 of 1905