பக்கம்:சோழர் வரலாறு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

சோழர் வரலாறு



அனைவரையும் கொன்றது. அவர் தலைகள் போர்க் களத்தில் உருண்டன; கழுகுகள் அவற்றைக் கொத்தித்தின்றன. முடிவில் வடகலிங்கம் பணிந்தது’[1].

கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பவன். அவன் சோழனை மதியாது திறை கட்டாதிருந்தான். அதனால் சோழன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைப் பெரும்படையுடன் அனுப்பினான். அத்தலைவனுடன் சென்ற படை பாலாறு, பொன்முகரி, பழவாறு. கொல்லியாறு, வட பெண்ணை, வயலாறு, மண்ணாறு, குன்றியாறு, ஆகியவற்றைக் கடந்து கிருஷ்ணையையும் தாண்டியது; பிறகு கோதாவரி, பம்பையாறு, கோதமை ஆறுகளைக் கடந்து கலிங்க நாட்டை அடைந்தது; அங்குச் சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச் சூறை ஆடியது. படையெடுப்பைக் கேட்ட கலிங்க அரசன் சினந்து, தன் படைகளைத் திரட்டினான். அப்பொழுது எங்கராயன் என்னும் அமைச்சன், சோழன் படை வலிமையைப் பல சான்றுகளால் விளக்கிச் சந்து செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினான். அரசன் கேட்டானில்லை. இறுதியில் போர் நடந்தது. கலிங்க அரசன் தோற்றோடினான். அவனைக் கருணாகரத் தொண்டைமான் தேடிப் பிடிக்க முடியாது, பெரும் பொருளோடு சோணாடு மீண்டான்.

சயங்கொண்டார் புலவர் முறையில் சில இடங்களில் செய்திகளை மிகுத்துக் கூறி இருப்பினும், படையெடுப்பு, வெற்றி என்பவை உண்மைச் செய்திகளே என்பது கல்வெட்டுகளால் உறுதிப்படுகிறது. கலிங்க அரசனான அனந்தவர்மன் யாவன்? இராசராச கங்கனுக்கும் குலோத்துங்கன் மகளான இராச சுந்தரிக்கும் பிறந்தவனே ஆவன். எனினும் என்ன? அரசன் என்னும் ஆணவம் உறவை மதியாதன்றோ? இப்போருக்குப் பரணி கூறும்


  1. 44 of 1891.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/264&oldid=492432" இலிருந்து மீள்விக்கப்பட்டது