பக்கம்:சோழர் வரலாறு.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

269



சேனைத் தலைவனும் அமைச்சனும் ஆவன். இவன் பல்லவர் குலத் தோன்றல்; ‘வண்டையர் அரசன்-அரசர்கள் நாதன் - மந்திரி - உலகு புகழ் கருணாகரன்’ என்று சயங்கொண்டாரால் கலிங்கத்துப் பரணியிற் புகழப் பெற்றவன். இவன் விக்கிரம சோழனது ஆட்சியிலும் இருந்தான் என்பதை விக்கிரம சோழன் உலாகுறித்துள்ளது. இவனது ஊர் வண்டை என்பது. அது,சோழமண்டலத்தில் குலோத்துங்க சோழ வளநாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டில் உள்ள வண்டாழஞ்சேரி என்பதைக் கல்வெட்டு ஒன்று உணர்த்துகிறது[1]. அஃது இப்பொழுது ‘வண்டுவாஞ்சேர’ என்னும் பெயருடன் இருக்கிறது. இத்தொண்டைமான் மனைவி பெயர் ‘அழகிய மணவாளனி மண்டையாழ்வார்’ என்பது. அவள் சில கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்துள்ளாள். கருணாகரத் தொண்டை மான் தமையன் ‘சேனாபதி-பல்லவராசர்’ என்பவன். அவன் கொடி, பழைய பல்லவர் கொடியாகிய நந்திக் கொடியாகும்[2]. அவனும் கலிங்கப் போரிற் கலந்து கொண்டவன் என்பதைப் பரணி பகர்கிறது. கருணாகரன் திருவாரூர்ச் சிவபிரானிடம் நீங்காத பேரன்பு உடையவன்; அக்கோவிலில் பல திருப்பணிகள் செய்தவன்; அக்கோவிற் பெருமான் திருவடிகளிற் கலந்தவன், தியாகேசர் பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்றாகும். அப்பெயர் இவனாற்றான் உண்டானது என்று திருவாரூர் உலா குறிக்கின்றது. இக்குறிப்பால் இவன் சிறந்த சிவபக்தன் என்பது விளக்கமாகின்றது.

அரையன் மதுராந்தகன் ஆன குலோத்துங்க சோழ கேரளராசன் என்பவன் ஒருவன். இவன் சிறந்த சேனைத் தலைவன்; சோழ மண்டலத்து மண்ணி நாட்டில் உள்ள முழையூருக்குத் தலைவன்: ‘குலோத்துங்க சோழக் கேரள


  1. S.I.I. Vol.4, No.862
  2. 46 of 1914.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/271&oldid=492726" இலிருந்து மீள்விக்கப்பட்டது