பக்கம்:சோழர் வரலாறு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சோழர் வரலாறு



ஒப்பாய் நீ’ என விளக்கியிருத்தல் பாராட்டத்தக்கது. இவர் பின்னும் ‘வெற்றியாக முழங்கும் முரசினையும் தப்பாத வாளினையும் உடைய நினது வெண்கொற்றக் குடை உவாமதி போன்றது என்று நினைந்து நின்பால் பரிசில் பெற யான் வந்தேன்”[1] எனக் கூறுதல், கரிகாலனது செங்கோற் சிறப்பை உணர்த்தி நிற்கின்றதன்றோ?

இக்கரிகாலனைப் பாடிய மற்றொரு புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்பவர். இவர் சென்றவுடன் கரிகாலன் பரிசில் தரவில்லை: எக்காரணம் பற்றியோ காலம் தாழ்த்தான். அப்பொழுது புலவர் வருந்தி ஒரு பாட்டைப் பாடினார்; அதன் அகத்துக் கரிகாலன் சிறப்பைப் பொது முறையிலே வைத்துக் கூறியிருத்தல் கவனித்தற்குரியது.

“கரிகாலன் காற்று இயங்கினாற்போலும் தாவுதலை உடையதாகிய கதியையுடைய குதிரையுடன் கொடி நுடங்கும் உச்சியைக் கொண்ட தேர் உடையவன்; கடலைக் கண்டாற் போலும் ஒளி பொருந்திய படைக் கலங்களைக் கொண்ட சேனை வீரரை உடையவன்; மலையோடு மாறுபட்டுப் பொரும் களிறுகளை உடையவன் இடி முழங்கினாற் போலும் அஞ்சத்தக்க முரசம் உடையவன்; போரில் மேம்படும் வெற்றியை உடையவன்.”[2]

இக்கரிகாலனைப் பிற்காலத்திற் பாடிய புலவர் பலராவர். அவர்கள் பரணர், நக்கீரர், இளங்கோவடிகள் சயங்கொண்டார், சேக்கிழார் முதலியோர் ஆவர். இவன் காலத்தில் தமிழ்மொழி சிறந்த நிலையில் இருந்தது என்பது சங்க நூல்களைக் கொண்டு நன்கறியக் கிடக்கிறது. இவன், புலவர்தம் கல்வித் திறத்தைச் சீர்தூக்கிப் பட்டி மண்டபத்தையும் நல்லாசிரியர் ஒருங்கிருந்து ஆராய்ச்சி செய்யத்தக்க கலைக்


  1. புறம் 60.
  2. அகம் 197.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/66&oldid=480635" இலிருந்து மீள்விக்கப்பட்டது