பக்கம்:சோழர் வரலாறு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

சோழர் வரலாறு



சேர சோழ பாண்டிய நாடுகளில் பெளத்தப் பள்ளிகளும் விகாரங்களும் பெருகின. கரிகாலன் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இந்திரவிகாரம் இருந்திருத்தல் வேண்டும்; இங்ஙனமே சமணப் பள்ளிகளும் இருந்திருத்தல் வேண்டும்;[1] வேதியர் வடநூல் முறைப்படி வேள்விகள் செய்து வந்தனர். இவரன்றி வாணிகத்தின் பொருட்டுச் சோணாடு புக்க பல நாட்டு மக்கள் கொண்டிருந்த சமயங்கள் பலவாகும். இங்ஙணம் பற்பல சமயத்தவர் சோணாட்டில் இருந்தாலும், அவரனைவரும் ஒருதாயீன்ற மக்களைப் போலக் கரிகாலன் ஆட்சியில் கலந்து உறைந்தனர். அரசனும் எல்லாச் சமயத்தவரையும் மதித்து நடந்து வந்தான். கரிகாலன் தனக்கெனக் கொண்டிருந்த சமயம் சைவம் ஆகும். இவன் காஞ்சி நகரில் உள்ள பண்டைக் கோவிலாகிய ஏகம்பவாணர் திருக்கோவில் திருப்பணி செய்து வழிபட்டான். இவனது திருத்தொண்டினைச் சைவ சமயக் குரவரும் கி.பி. 7-ஆம் நூற்றாண்டினருமாகிய திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பதிகத்துச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

    “விண்ணுளார் மறைகள் வேதம் விரித்தோதுவார்
    கண்ணுளார் கழலின் செல்வார் கரிகாலனை
    நண்ணுவார் எழில்கொள கச்சிநகர் ஏகம்பத்(து)
    அண்ணலார் ஆடுகின்ற அலங்காரமே.”[2]

இவனது உருவச் சிலை ‘ஏகாம்பரநாதர்’ கோவிலில் இருக்கிறது. இவன் வைதிக வேள்விகளையும் செய்தவன் ஆவன்.[3]


  1. Asoka’t Rock Edicts 2 and 13.
  2. திருக்கச்சி ஏகம்பம்: ‘மறையானை’ என்னும் பதிகம்; 7-ஆம் பாடல்.
  3. புறம் 224.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/68&oldid=480648" இலிருந்து மீள்விக்கப்பட்டது