பக்கம்:சோழர் வரலாறு.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
67
 


இவனது அணிமிக்க கோநகரான காவிரிப் பூம்பட்டினத்தில்,

    “நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
    பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறா” கப்

பல கோவில்கள் இருந்தன என்பது அறியக் கிடக்கிறது.

பிற அரசர்கள்: அக்காலத்துப் பாண்டியன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பெருவழுதியாவன்; சேர அரசன் சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை என்பவன்; சிற்றரசர் - ஏனாதி திருக்கிள்ளி, ஈர்ந்துர்க் கிழான் தோயன் மாறன், சோழியஏனாதி திருக்குட்டுவன், கரிகாலனிடம் தோற்ற இருங்கோவேள் முதலியோர் ஆவர்.[1]

அரச குடும்பம்: கரிகால் வளவன் தந்தை இளஞ்சேட் சென்னி, தாய் அழுந்துர் வேள் மகள் என்பது முன்பே கூறப்பட்டது. இவன் நாங்கூர் (சீகாழித் தாலூகா) வேள் மகளை மணந்து கொண்டான்.[2] இவளன்றி வேறு மனைவியர் சிலரும் இருந்தனர்.[3] ஆதிமந்தியார் என்ற மகளும் இருந்தனள்[4] என்பர். இக்கூற்று ஆராய்ச்சிக்கு உரியது.

இறுதி : கிறிஸ்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டில் சோழப் பேரரசை ஏற்படுத்தி ஒரு குடைக் கீழ் வைத்தாண்ட கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தான் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது.[5]


  1. K.N.S. Pillai's Chronology of the Early Tamils.
  2. Thol. Porul S. 30 and its commentary.
  3. பட்டினப்பாலை, வரி, 295, 299.
  4. Sentamil, Vol.2, p. 114.
  5. L. Ulaganatha Pillai’s ‘Karikala Chola’, p.66.