பட்டினப்பாலை
Appearance
சோழன் கரிகாலன் பொருளாதாரத்தை மேப்படுத்தினான்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
[தொகு]பாடியது.
அகப்பாடல்
திணை: பாலைத்திணை
துறை:செலவழுங்கல் துறை
கூற்று: தலைவன் கூற்று
கேட்போர்: நெஞ்சுக்குக் கூறியது
(பிழையில்லா மெய்ப்பதிப்பு)
[தொகு]பட்டினப்பாலை-மூலம்
[தொகு]பட்டினப்பாலை என்ற பெயர் பற்றிய நச்சினார்க்கினியர் விளக்கம்:
- "இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணை யாகலின், இதற்குப் பட்டினப்பாலை என்று பெயர் கூறினார்.
- பாலையாவது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் கூறுவது.
- இப்பாட்டு, வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக் கூறியது;(தொல். கற்பு. சூ. 5). இது , முதலும் கருவுங் கூறாது உரிப்பொருளே சிறப்பக் கூறியது."
- வசையில்புகழ் வயங்குவெண்மீன் // 01 // வசை இல் புகழ் வயங்கு வெள் மீன்
- றிசைதிரிந்து தெற்கேகினுந் // 02 // திசை திரிந்து தெற்கு ஏகினும்
- தற்பாடிய தளியுணவிற் // 03 // தன் பாடிய தளி உணவின்
- புட்டேம்பப் புயன்மாறி // 04 // புள் தேம்ப புயல் மாறி
- வான்பொய்ப்பினுந் தான்பொய்யா // 05 // வான் பொய்ப்பினும் தான் பொய்யா
- மலைத்தலைய கடற்காவிரி // 06 // மலை தலைய கடல் காவிரி
- புனல்பரந்து பொன்கொழிக்கும் // 07 // புனல் பரந்து பொன் கொழிக்கும்
- விளைவறா வியன்கழனிக் // 08 // விளைவு அறா வியல் கழனி
- கார்க்கரும்பின் கமழாலைத் // 09 // கார் கரும்பின் கமழ் ஆலை
- தீத்தெறுவிற் கவின்வாடி // 10 // தீ தெறுவின் கவின் வாடி
- நீர்ச்செறுவி னீணெய்தற் // 11 // நீர் செறுவின் நீள் நெய்தல்
- பூச்சாம்பும் புலத்தாங்கட் // 12 // பூ சாம்பும் புலத்து ஆங்கண்
- காய்ச்செந்நெற் கதிரருந்து // 13 // காய் செ நெல் கதிர் அருந்தும்
- மோட்டெருமை முழுக்குழவி // 14 // மோட்டு எருமை முழு குழவி
- கூட்டுநிழற் றுயில்வதியுங் // 15 // கூட்டு நிழல் துயில் வதியும்
- கோட்டெங்கிற் குலைவாழைக் // 16 // கோள் தெங்கின் குலை வாழை
- காய்க்கமுகிற் கமழ்மஞ்ச // 17 // காய் கமுகின் கமழ் மஞ்சள்
- ளினமாவி னிணர்ப்பெண்ணை // 18 // இன மாவின் இணர் பெண்ணை
- முதற்சேம்பின் முளையிஞ்சி // 19 // முதல் சேம்பின் முளை இஞ்சி
- யகனகர் வியன்முற்றத்துச் // 20 // அகல்? நகர் வியன் முற்றத்து
- சுடர்நுதன் மடநோக்கி // 21 // சுடர் நுதல் மட நோக்கின்
- னேரிழை மகளி ருணங்குணாக் கவருங் // 22 // நேர் இழை மகளிர் உணங்கு உணா கவரும்
- கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை // 23 // கோழி எறிந்த கொடு கால் கனம் குழை
- பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டு // 24 // பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்
- முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும் // 25 // முக்கால் சிறு தேர் முன் வழி விலக்கும்
- விலங்குபகை யல்லது கலங்குபகை யறியாக் // 26 // விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா
- கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக் // 27 // கொழும்? பல் குடி செழும் பாக்கத்து
- குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு // 28 // குறு பல் ஊர் நெடு சோணாட்டு
[தொகு]
- வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி // 29 // வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி
- நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி // 30 // நெல்லொடு வந்த வல் வாய் பஃறி
- பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங் /31/ பணை நிலை புரவியின் அணை முதல் பிணிக்கும்
- கழிசூழ்படப்பைக் கலியாணர்ப் // 32 // கழி சூழ் படப்பை கலி யாணர்
- பொழிற்புறவிற் பூந்தண்டலை // 33 // பொழில் புறவின் பூ தண்டலை
- மழைநீங்கிய மாவிசும்பின் // 34 // மழை நீங்கிய மாக விசும்பின்
- மதிசேர்ந்த மகவெண்மீ // 35 // மதி சேர்ந்த மக வெள் மீன்
- னுருகெழுதிற லுயர்கோட்டத்து // 36 // உரு கெழு திறல் உயர் கோட்டத்து
- முருகமர்பூ முரண்கிடக்கை // 37 // முருகு அமர் பூ முரண் கிடக்கை
- வரியணிசுடர் வான்பொய்கை // 38 // வரி அணி சுடர் வான் பொய்கை
- யிருகாமத் திணையேரிப் // 39 // இரு காமத்து இணை ஏரி
- புலிப்பொறிப் போர்க்கதவிற் // 40 // புலி பொறி போர் கதவின்
- றிருத்துஞ்சுந் திண்காப்பிற் // 41 // திரு துஞ்சும் திண் காப்பின்
- புகழ்நிலைஇய மொழிவளர // 42 // புகழ் நிலைஇய மொழி வளர
- வறநிலைஇய வகனட்டிற் // 43 // அறம்? நிலைஇய அகன் அட்டில்
- சோறுவாக்கிய கொழுங்கஞ்சி // 44 // சோறு ஆக்கிய கொழும் கஞ்சி
- யாறுபோலப் பரந்தொழுகி // 45 //ஆறு போல பரந்து ஒழுகி
- யேறுபொரச் சேறாகித் // 46 // ஏறு பொர சேறு ஆகி
- தேரோடத் துகள்கெழுமி // 47 // தேர் ஓட துகள் கெழுமி
- நீறாடிய களிறுபோல // 48 // நீறு ஆடிய களிறு போல
- வேறுபட்ட வினையோவத்து // 49 // வேறு பட்ட வினை ஓவத்து
- வெண்கோயின் மாசூட்டுந் // 50 // வெள் கோயின் மாசு ஊட்டும்
- தண்கேணித் தகைமுற்றத்துப் // 51 // தண் கேணி தகை முற்றத்து
- பகட்டெருத்தின் பலசாலைத் // 52 // பகட்டு எருத்தின் பல சாலை
- தவப்பள்ளித் தாழ்காவி // 53 // தவ பள்ளி தாழ் காவின்
- னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு // 54 // அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
- மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம் // 55 // ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம்
- மாயிரும் பெடையோ டிரியல் போகிப் // 56 // மா இரும் பெடையோடு இரியல் போகி
- பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த் // 57 // பூதம் காக்கும் புகல் அரு கடி நகர்
- தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு // 58 // தூது உணம்? புறவொடு துச்சில் சேக்கும்
- முதுமரத்த முரண்களரி // 59 // முது மரத்த முரண் களரி
- வரிமண லகன்றிட்டை // 60 // வரி மணல் அகன் திட்டை
- யிருங்கிளை யினனொக்கற் // 61 // இரும் கிளை இனன் ஒக்கல்
- கருந்தொழிற் கலிமாக்கள் // 62 // கரு தொழில் கலி மாக்கள்
- கடலிறவின் சூடுதின்றும் // 63 // கடல் இறவின் சூடு தின்றும்
- வயலாமைப் புழுக்குண்டும் // 64 // வயல் ஆமை புழுக்கு உண்டும்
- வறளடும்பின் மலர்மலைந்தும் // 65 // வறள் அடும்பின் மலர் மலைந்தும்
- புனலாம்பற் பூச்சூடியு // 66 // புனல் ஆம்பல் பூ சூடியும்
- நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு // 67 // நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரு
- நாண்மீன் விராய கோண்மீன் போல // 68 // நாள் மீன் விராய கோள்மீன் போல
- மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக் // 69 // மலர் தலை மன்றத்து பலருடன் குழீஇ
- கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப் // 70 // கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி
- பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ // 71 // பெரு சினத்தால் புறம்? கொடாஅது
- திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர் // 72 // இரு? செருவின் இகல் மொய்ம்பினோர்
[தொகு]
- கல்லெறியுங் கவண்வெரீஇப் // 73 // கல் எறியும் கவண் வெரீஇ
- புள்ளிரியும் புகர்ப்போந்தைப் // 74 // புள் இரியும் புகர் போந்தை
- பறழ்ப்பன்றிப் பல்கோழி // 75 // பறழ் பன்றி பல் கோழி
- யுறைக்கிணற்றுப் புறச்சேரி // 76 // உறை கிணற்று புறம் சேரி
- மேழகத் தகரொடு சிவல்விளை யாடக் // 77 // மேழகம் தகரொடு சிவல் விளையாட
- கிடுகுநிரைத் தெஃகூன்றி // 78 // கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி
- நடுகல்லி னரண்போல // 79 // நடுகல்லின் அரண் போல
- நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய // 80 // நெடும் தூண்டிலின் காழ் சேர்த்திய
- குறுங்கூரைக் குடிநாப்ப // 81 // குறு கூரை குடி நாப்பண்
- ணிலவடைந்த விருள்போல // 82 // நிலவு அடைந்த இருள் போல
- வலையுணங்கு மணன்முன்றில் // 83 // வலை உணங்கு மணல் முன்றில்
- வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த // 84 // வீழ் தாழை தாள் தாழ்ந்த
- வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர் //85 // வெண் கூதாளத்து தண் பூ கோதையர்
- சினைச்சுறவின் கோடுநட்டு // 86 // சினை சுறவின் கோடு நட்டு
- மனைச்சேர்த்திய வல்லணங்கினான் // 87 // மனை சேர்த்திய வல் அணங்கினான்
- மடற்றாழை மலர்மலைந்தும் // 88 // மடல் தாழை மலர் மலைந்தும்
- பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் // 89 // பிணர் பெண்ணை பிழி மாந்தியும்
- புன்றலை யிரும்பரதவர் // 90 // புன் தலை இரும் பரதவர்
- பைந்தழைமா மகளிரொடு // 91 // பைந்தழை மா மகளிரொடு
- பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா // 92 // பா இரும் பனி கடல் வேட்டம் செல்லாது
- துவவுமடிந் துண்டாடியும் // 93 // உவவு மடிந்து உண்டு ஆடியும்
- புலவுமணற் பூங்கானன் // 94 // புலவு மணல் பூ கானல்
- மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் // 95 // மா மலை அணைந்த கொண்மூ போலவும்
- தாய்முலை தழுவிய குழவி போலவுந் // 96 // தாய் முலை தழுவிய குழவி போலவும்
- தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கு // 97 // தேறு நீர் புணரியோடு யாறு தலை மணக்கும்
- மலியோதத் தொலிகூடற் // 98 // மலி ஓதத்து ஒலி கூடல்
- றீதுநீங்கக் கடலாடியு // 99 // தீது நீங்க கடல் ஆடியும்
- மாசுபோகப் புனல்படிந்து // 100 // மாசு போக புனல் படிந்தும்
- மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும் // 101 // அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும்
- பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு // 102 // பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும்
- மகலாக் காதலொடு பகல்விளை யாடிப் // 103 // அகலா காதலொடு பகல் விளையாடி
- பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் // 104 // பெறற்கு அரும் தொல் சீர் துறக்கம் ஏய்க்கும்
- பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் // 105 // பொய்யா மரபின் பூ மலி பெரு துறை
[தொகு]
- துணைப்புணர்ந்த மடமங்கையர் // 106 // துணை புணர்ந்த மட மங்கையர்
- பட்டுநீக்கித் துகிலுடுத்து // 107 // பட்டு நீக்கி துகில் உடுத்தும்
- மட்டுநீக்கி மதுமகிழ்ந்து // 108 // மட்டு நீக்கி மது மகிழ்ந்தும்
- மைந்தர் கண்ணி மகளிர் சூடவு // 109 // மைந்தர் கண்ணி மகளிர் சூடவும்
- மகளிர் கோதை மைந்தர் மலையவு // 110 // மகளிர் கோதை மைந்தர் மலையவும்
- நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக் // 111 // நெடு கால் மாடத்து ஒள் எரி நோக்கி
- கொடுந்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும் // 112 // கொடு திமில் பரதவர் குரூஉ சுடர் எண்ணவும்
- பாட லோர்த்து நாடக நயந்தும் // 113 // பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
- வெண்ணிலவின் பயன்றுய்த்துங் // 114 // வெள் நிலவின் பயன் துய்த்தும்
- கண்ணடைஇய கடைக்கங்குலான் //115 // கண் அடைஇய கடை கங்குலான்
- மாஅகாவிரி மணங்கூட்டுந் // 116 // மாஅ காவிரி மணம் கூட்டும்
- தூஉவெக்கர்த் துயின்மடிந்து // 117 // தூஉ எக்கர் துயில் மடிந்து
- வாலிணர் மடற்றாழை // 118 // வால் இணர் மடல் தாழை
[தொகு]
- வேலாழி வியன்றெருவி // 119// வேல்ஆழி வியன் தெருவின்
- னல்லிறைவன் பொருள்காக்குந் // 120 // நல் இறைவன் பொருள் காக்கும்
- தொல்லிசைத் தொழின்மாக்கள் // 121 // தொல் இசை தொழில் மாக்கள்
- காய்சினத்த கதிர்ச்செல்வன் // 122 // காய் சினத்த கதிர் செல்வன்
- றேர்பூண்ட மாஅபோல // 123 // தேர் பூண்ட மாஅ போல
- வைகறொறு மசைவின்றி // 124 // வைகல்தொறும் அசைவு இன்றி
- யுல்குசெயக் குறைபடாது // 125 // உல்கு செய குறைபடாது
- வான்முகந்தநீர் மலைப்பொழியவு // 126 // வான் முகந்த நீர் மலை பொழியவும்
- மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு // 127 // மலை பொழிந்த நீர் கடல் பரப்பவும்
- மாரிபெய்யும் பருவம்போல // 128 // மாரி பெய்யும் பருவம் போல
- நீரினின்று நிலத்தேற்றவு // 129 // நீரினின்று நிலத்து ஏற்றவும்
- நிலத்தினின்று நீர்ப்பரப்பவு // 130 // நிலத்தினின்று நீர் பரப்பவும்
- மளந்தறியாப் பலபண்டம் // 131 // அளந்து அறியா பல பண்டம்
- வரம்பறியாமை வந்தீண்டி // 132 // வரம்பு அறியாமை வந்து ஈண்டி
- யருங்கடிப் பெருங்காப்பின் // 133 // அரு கடி பெரு காப்பின்
- வலியுடை வல்லணங்கினோன் // 134 // வலி உடை வல் அணங்கினோன்
- புலிபொறித்துப் புறம்போக்கி //135 // புலி பொறித்து புறம் போக்கி
- மதிநிறைந்த மலிபண்டம் // 136 // மதி நிறைந்த மலி பண்டம்
- பொதிமூடைப் போரேறி // 137 // பொதி மூடை போர் ஏறி
- மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் // 138 //மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
- வரையாடு வருடைத் தோற்றம் போலக் //139 // வரை ஆடு வருடை தோற்றம் போல
- கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை // 140 // கூர் உகிர் ஞமலி கொடு தாள் ஏற்றை
- யேழகத் தகரோ டுகளு முன்றிற் // 141 // ஏழகம் தகரொடு உகளும் முன்றில்
[தொகு]
- குறுந்தொடை நெடும்படிக்காற் // 142 // குறு தொடை நெடு படிக்கால்?
- கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் // 143 // கொடு திண்ணை பல் தகைப்பின்
- புழைவாயிற் போகிடைகழி // 144 // புழை வாயில் போகு இடைகழி
- மழைதோயு முயர்மாடத்துச் //145 // மழை தோயும் உயர் மாடத்து
- சேவடிச் செறிகுறங்கிற் // 146 // சே அடி செறி குறங்கின்
- பாசிழைப் பகட்டல்குற் // 147 // பாசிழை? பகட்டு அல்குல்
- றூசுடைத் துகிர்மேனி // 148 // தூசு உடை துகிர் மேனி
- மயிலியன் மானோக்கிற் // 149 // மயில் இயல் மான் நோக்கின்
- கிளிமழலை மென்சாயலோர் // 150 // கிளி மழலை மெல் சாயலோர்
- வளிநுழையும் வாய்பொருந்தி // 151 // வளி நுழையும் வாய் பொருந்தி
- யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங் // 152 // ஓங்குவரை மருங்கின் நுண்தாது உறைக்கும்
- காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன // 153 // காந்தள் அம் துடுப்பின் கவிகுலை அன்ன
- செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் // 154 // செறி தொடி முன் கை கூப்பி செ வேள்
- வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் // 155 // வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய்
- குழலகவ யாழ்முரல // 156 // குழல் அகவ யாழ் முரல
- முழவதிர முரசியம்ப // 157 // முழவு அதிர முரசு இயம்ப
- விழவறா வியலாவணத்து // 158 // விழவு அறா வியல் ஆவண்த்து
- மையறு சிறப்பிற் றெய்வஞ் சேர்த்திய // 159 // மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய
- மலரணி வாயிற் பலர்தொழு கொடியும் //160 // மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும்
- வருபுன றந்த வெண்மணற் கான்யாற் // 161 // வரு புனல் தந்த வெண் மணல் கான் யாற்று
- றுருகெழு கரும்பி னொண்பூப் போலக் // 162 // உரு கெழு கரும்பின் ஒள் பூ போல
- கூழுடைக் கொழுமஞ்சிகைத் // 163 // கூழ் உடை கொழு மஞ்சிகை
- தாழுடைத் தண்பணியத்து // 164 // தாழ் உடை தண் பணியத்து
- வாலரிசிப் பலிசிதறிப் // 165 // வால் அரிசி பலி சிதறி
- பாகுகுத்த பசுமெழுக்கிற் // 166 // பாகு உகுத்த பசு மெழுக்கின்
- காழூன்றிய கவிகிடுகின் // 167 // காழ் ஊன்றிய கவி கிடுகின்
- மேலூன்றிய துகிற்கொடியும் // 168 // மேல் ஊன்றிய துகில் கொடியும்
- பல்கேள்வித் துறைபோகிய // 169 // பல் கேள்வி துறை போகிய
- தொல்லாணை நல்லாசிரிய // 170 // தொல் ஆணை நல் ஆசிரியர்
- ருறழ்குறித் தெடுத்த வுருகெழு கொடியும் // 171 // உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும்
- வெளிலிளக்குங் களிறுபோலத் // 172 // வெளில் இளக்கும் களிறு போல
- தீம்புகார்த் திரைமுன்றுறைத் // 173 // தீ? புகார் திரை முன் துறை
- தூங்குநாவாய் துவன்றிருக்கை // 174 // தூங்கு நாவாய் துவன்று இருக்கை
- மிசைக்கூம்பி னசைக்கொடியு// 175 // மிசை கூம்பின் அசை? கொடியும்
- மீன்றடிந்து விடக்கறுத் // 176 // மீன் தடிந்து விடக்கு அறுத்து
- தூன்பொரிக்கு மொலிமுன்றின் // 177 // ஊன் பொரிக்கும் ஒலி முன்றில்
- மணற்குவைஇ மலர்சிதறிப் // 178 // மணல் குவைஇ மலர் சிதறி
- பலர்புகுமனைப் பலிப்புதவி // 179 // பலர் புகு மனை பலி புதவின்
- னறவுநொடைக் கொடியோடு // 180 // நறவு நொடை கொடியோடு
- பிறபிறவு நனிவிரைஇப் // 181 // பிற பிறவும் நனி விரைஇ
- பல்வேறு ருருவிற் பதாகை நீழற் // 182 // பல் வேறு உருவின் பதாகை நீழல்
- செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற் // 183 // செல் கதிர் நுழையா செழு நகர் வரைப்பின்
[தொகு]
- செல்லா நல்லிசை யமரர் காப்பி // 184 // செல்லா நல் இசை அமரர் காப்பின்
- னீரின் வந்த நிமிர்பரிப் புரவியுங் // 185 // நீரின் வந்த நிமிர் பரி புரவியும்
- காலின் வந்த கருங்கறி மூடையும் // 186 // காலின் வந்த கரு கறி மூடையும்
- வடமலைப் பிறந்த மணியும் பொன்னுங் // 187 // வட மலை பிறந்த மணியும் பொன்னும்
- குடமலைப் பிறந்த வாரமு மகிலுந் // 188 // குடமலை பிறந்த ஆரமும் அகிலும்
- தென்கடன் முத்துங் குணகடற் றுகிருங் // 189 // தென் கடல் முத்தும் குண கடல் துகிரும்
- கங்கை வாரியுங் காவிரிப் பயனு // 190 // கங்கை வாரியும் காவிரி பயனும்
- மீழத் துணவுங் காழகத் தாக்கமு // 191 // ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்
- மரியவும் பெரியவு நெரிய வீண்டி // 192 // அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
- வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி // 193 // வளம் தலை மயங்கிய நன தலை மறுகின்
- னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு // 194 // நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும்
- மேமாப்ப வினிதுதுஞ்சிக் // 195 // ஏமாப்ப இனிது துஞ்சி
- கிளைகலித்துப் பகைபேணாது // 196 // கிளை கலித்து பகை பேணாது
- வலைஞர்முன்றின் மீன்பிறழவும் // 197 // வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
- விலைஞர் குரம்பை மாவீண்டவுங் // 198 // விலைஞர் குரம்பை மா ஈண்டவும்
- கொலைகடிந்துங் களவுநீக்கியு // 199 // கொலை கடிந்தும் களவு நீக்கியும்
- மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு // 200 // அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்
- நல்லானொடு பகடோம்பியு // 201 // நல் ஆனொடு பகடு ஓம்பியும்
- நான்மறையோர் புகழ்பரப்பியும் // 202 // நால் மறையோர் புகழ் பரப்பியும்
- பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும் // 203 // பண்ணியம் அட்டியும் பசு பதம் கொடுத்தும்
- புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் // 204 // புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
- கொடுமேழி நசையுழவர் // 205 // கொடு மேழி நசை உழவர்
- நெடுநுகத்துப் பகல்போல // 206 // நெடு நுகத்து பகல் போல
- நடுவுநின்ற நன்னெஞ்சினோர் // 207 // நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
- வடுவஞ்சி வாய்மொழிந்து // 208 // வடு அஞ்சி வாய் மொழிந்து
- தமவும் பிறவு மொப்ப நாடிக் // 209 // தமவும் பிறவும் ஒப்ப நாடி
- கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது // 210 // கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூம் குறை கொடாது
- பல்பண்டம் பகர்ந்துவீசுந் // 211 // பல் பண்டம் பகர்ந்து வீசும்
- தொல்கொண்டித் துவன்றிருக்கைப் // 212 // தொல் கொண்டி துவன்று இரு்க்கை
- பல்லாயமொடு பதிபழகி // 213 // பல் ஆயமொடு பதி பழகி
- வேறுவே றுயர்ந்த முதுவா யொக்கற் // 214 // வேறு வேறு உயர்ந்த முதுவாய் ஒக்கல்
- சாறயர் மூதூர் சென்றுதொக் காங்கு // 215 // சாறு அயர் மூதூர்? சென்று தொக்கு ஆங்கு
- மொழிபல பெருகிய பழிதீர் தேஎத்துப் // 216 // மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து
- புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையு // 217 // புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
- முட்டாச் சிறப்பிற் பட்டினம் பெறினும் // 218 // முட்டா சிறப்பின் பட்டினம் பெறினும்
- வாரிருங் கூந்தல் வயங்கிழை யொழிய // 219 // வார் இரும் கூந்தல் வயங்கு இழை ஒழிய
- வாரேன் வாழிய நெஞ்சே கூருகிர்க் // 220 // வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர்
[தொகு]
- கொடுவரி்க் குருளை கூட்டுள் வளர்ந்தாங்குப் // 221 // கொடு வரி குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு
- பிறர், பிணியகத் திருந்து பீடுகாழ் முற்றி // 222 // பிறர் பிணி அகத்து இருந்து பீடு காழ் முற்றி
- யருங்கரை கவியக் குத்திக் குழிகொன்று // 223 // அரு கரை கவிய குத்தி குழி கொன்று
- பெருங்கை யானை பிடிபுக் காங்கு // 224 // பெரு கை யானை பிடி புக்கு ஆங்கு
- நுண்ணிதி னுணர நாடி நண்ணார் // 225 // நுண்ணிதின் உணர நாடி நண்ணார்
- செறிவுடைத் திண்காப் பேறி வாள்கழித் // 226 // செறிவு உடை திண் காப்பு ஏறி வாள் கழித்து
- துருகெழு தாய மூழி னெய்திப் // 227 // உருகெழு தாயம் ஊழின் எய்தி
- பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் // 228 // பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர்
- கடியரண் டொலைத்த கதவுகொன் மருப்பின் // 229 // கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின்
- முடியுடைக் கருந்தலை புரட்டு முன்றா // 230 // முடி உடை கரு தலை புரட்டு முன் தாள்
- ளுகிருடை யடிய வோங்கெழில் யானை // 231 // உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை
- வடிமணிப் புரவியொடு வயவர் வீழப் // 232 // அடி மணி புரவியொடு வயவர் வீழ
- பெருநல் வானத்துப் பருந்துலாய் நடப்பத் // 233 // பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப
- தூறிவர் துறுகற் போலப் போர்வேட்டு // 234 // தூறு இவர் துறு கல் போல போர் வேட்டு
- வேறுபல் பூளையொ டுழிஞை சூடிப் // 235 // வேறு பல் பூளையொடு உழிஞை சூடி
- பேய்க்க ணன்ன பிளிறுகடி முரச // 236 // பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம்
- மாக்க ணகலறை யதிர்வன முழங்க // 237 // மா கண் அகல் அறை அதிர்வன முழங்க
- முனைகெடச் சென்று முன்சம முருக்கித் // 238 // முனை கெட சென்று முன் சமம் முருக்கி
- தலைதவச் சென்று தண்பணை யெடுப்பி // 239 // தலைதவ சென்று தண்பணை எடுப்பி
- வெண்பூக் கரும்பொடு செந்நெ னீடி // 240 // வெள் பூ கரும்பொடு செ நெல் நீடி
- மாயிதழ்க் குவளையொடு நெய்தலு மயங்கிக் // 241 // மா இதழ் குவளையொடு நெய்தலும் மயங்கி
- கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக் // 242 // கராஅம் கலித்த கண் அகன் பொய்கை
- கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச் // 243 // கொழு கால் புதவமொடு செருந்தி நீடி
- செறுவும் வாவியு மயங்கி நீரற் // 244 // செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று
- றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங்/245/ அறுகோட்டு இரலையொடு மான்பிணை உகளவும்
[தொகு]
- கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி // 246 // கொண்டி மகளிர் உண் துறை மூழ்கி
- யந்தி மாட்டிய நந்தா விளக்கின் // 247 // அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
- மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ // 248 // மலர் அணி மெழுக்கம் ஏறி பலர் தொழ
- வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற் // 249 // வம்பலர் சேக்கும் கந்து உடை பொதியில்
- பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப் // 250 // பரு நிலை நெடு தூண் ஒல்க தீண்டி
- பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு /251/ பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும்
- மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின் // 252 // அரு விலை நறும் பூ தூஉய் தெருவின்
- முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த // 253 // முதுவாய் கோடியர் முழவொடு புணர்ந்த
- திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும் // 254 // திரி புரி நரம்பின் தீ தொடை ஓர்க்கும்
- பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச் // 255 // பெரு விழா கழிந்த பேஎ முதிர் மன்றத்து
- சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி // 256 // சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி
- யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு // 257 // அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்புவும்
- மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங் / 258 / அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும்
- கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப் //259/ கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ
- பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங் // 260 // பிணம் தின் யாக்கை பேய் மகள் துவன்றவும்
- கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி // 261 // கொடு கால் மாடத்து நெடு கடை துவன்றி
- விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி // 262 // விருந்து உண்டு ஆனா பெரு சோறு அட்டில்
- லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து // 263 // ஒள் சுவர் நல் இல் உயர் திணை இருந்து
- பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த் // 264 // பைங்கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர்
- தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் //265 // தொடு தோல் அடியர் துடி பட குழீஇ
- கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட // 266 // கொடு வில் எயினர் கொள்ளை உண்ட
- வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து // 267 // உணவு இல் வறு கூட்டு உள் அகத்து இருந்து
- வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு // 268 // வளை வாய் கூகை நல் பகல் குழறவும்
- மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப் // 269 // அரு கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
- பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற // 270 // பெரு பாழ் செய்து அமையான் மருங்கு அற
[தொகு]
- மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே // 271 // மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே
- வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் // 272 // வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என
- தான்முன்னிய துறைபோகலிற் // 273 // தான் முன்னிய துறை போகலின்
- பல்லொளியர் பணிபொடுங்கத் // 274 // பல் ஒளியர் பணிபு ஒடுங்க
- தொல்லருவாளர் தொழில்கேட்ப // 275 // தொல் அருவாளர் தொழில் கேட்ப
- வடவர் வாடக் குடவர் கூம்பத் // 276 // வடவர் வாட குடவர் கூம்ப
- தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர் // 277 // தென்னவன் திறல் கெட சீறி மன்னர்
- மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண் // 278 // மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள்
- மாத்தானை மறமொய்ம்பிற் // 279 // மா தானை மற மொய்ம்பின்
- செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் // 280 // செ கண்ணால் செயிர்த்து நோக்கி
- புன்பொதுவர் வழிபொன்ற // 281 // புன் பொதுவர் வழி பொன்ற
- விருங்கோவேண் மருங்குசாயக் // 282 // இருங்கோவேள் மருங்கு சாய
- காடுகொன்று நாடாக்கிக் // 283 // காடு கொன்று நாடு ஆக்கி
- குளந்தொட்டு வளம்பெருக்கிப் // 284 // குளம் தொட்டு வளம் பெருக்கி
- பிறங்குநிலை மாடத் துறந்தை போக்கிக் // 285 // பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கி
- கோயிலொடு குடிநிறீஇ // 286 // கோயிலொடு குடி நிறீஇ
- வாயிலொடு புழையமைத்து // 287 // வாயிலொடு புழை அமைத்து
- ஞாயிறொறும் புதைநிறீஇப் // 288 // ஞாயில் தொறும் புதை நிறீஇ
- பொருவேமெனப் பெயர்கொடுத் // 289 // பொருவேம் என பெயர் கொடுத்து
- தொருவேமெனப் புறக்கொடாது // 290 // ஒருவேம் என புறம் கொடாது
- திருநிலைஇய பெருமன்னெயின் // 291 // திரு நிலைஇய பெரு மன் எயில்
- மின்னொளி யெறிப்பத் தம்மொளி மழுங்கி // 292 // மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி
- விசிபிணி முழவின் வேந்தர் சூடிய // 293 // விசி பிணி முழவின் வேந்தர் சூடிய
- பசுமணி பொருத பரேரெறுழ்க் கழற்காற் // 294 // பசு மணி பொருத பரு ஏர் எறுழ் கழல் கால்
- பொற்றொடிப் புதல்வ ரோடி யாடவு // 295 // பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும்
- முற்றிழை மகளிர் முகிழ்முலை திளைப்பவுஞ் / 296 / முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும்
- செஞ்சாந்து சிதைந்த மாப்பி னொண்பூ // 297 // செ சாந்து சிதைந்த மாப்?பின் ஒள் பூண்
- ணரிமா வன்ன வணங்குடைத் துப்பிற் // 298 // அரிமா அன்ன அணங்கு உடை துப்பின்
- றிருமா வளவன் றெவ்வர்க் கோக்கிய // 299 // திரு மா வளவன் தெவ்வர்க்கு ஓக்கிய
- வேலினும் வெய்ய கானமவன் // 300 // வேலினும் வெய்ய கானம் அவன்
- கோலினுந் தண்ணிய தடமென் றோளே. // 301 // கோலினும் தண்ணிய தட மென் தோளே.
சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடிய பட்டினப்பாலை முற்றும்
[தொகு]இப்பாடலின் மொத்த அடிகள்: 301 (முந்நூற்றொன்று)
பாவகை: வஞ்சிப்பா (வஞ்சிநெடும்பாட்டு என்றும் இதனை அழைப்பர்: தமிழில் உள்ள வஞ்சிப்பா வகையில் மிகப் பெரியது இதுவே)
வெண்பா
[தொகு]- முச்சக் கரமு மளப்பதற்கு நீட்டியகால்
- இச்சக் கரமே யளந்ததாற்- செய்ச்செய்
- அரிகான்மேற் றேன்றொடுக்கு மாய்புனனீர் நாடன்
- கரிகாலன் கானெருப் புற்று.
- இந்தவெண்பா பொருநராற்றுப்படையின் இறுதியிலுள்ள மூ்ன்றாவது வெண்பாவாகவும் உள்ளது.
முக்கியச் செய்திகள்
[தொகு]- பெயர் விளக்கம்:
- நச்சினார்க்கினியர் கூறுவது:
- "இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத்திணையாகலின், இதற்குப் பட்டினப்பாலை யென்று பெயர் கூறினார்.
- பாலையாவது பிரிதலும் பிரிதனிமித்தமும் கூறுவது.
- இப்பாட்டு , வேற்றுநாட்டகல்வயின் விழுமத்துத் தலைவன் செலவழுங்கிக் கூறியது; (தொல். கற்பு. சூ. 5). இது, முதலும் கருவுங் கூறாது உரிப்பொருளே சிறப்பக் கூறியது".
- வினைமுடிபு: