பக்கம்:சோழர் வரலாறு.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

89



நாணி வடக்கிருந்தான். வடக்கிருத்தல் என்பது - யாதேனும் ஒரு காரணம் பற்றி உயிர் துறக்கத் துணிந்தோர் ஆற்று இடைக்குறைபோலும் தூயதொரு தனி இடத்து எய்தி, வடக்கு நோக்கி இருந்து, உணவு முதலியன துறந்து, கடவுட் சிந்தையுடன் உயிர் விடுவதாகும். இங்ஙனம் வடக்கிருந்த சோழன் தான் உணர்ந்த அறநெறிச் சாரத்தைத் தன் நண்பர்க்கு உணர்த்த விரும்பிக் கீழ் வருமாறு கூறினான்:

அறவுரை: “தெளிவற்ற உள்ளம் உடையோர், ‘அறத்தினைச் செய்வோமோ, செய்யாதிருப்போமோ’ என்று கருதி ஐயம் நீங்காதவராகின்றனர். யானை வேட்டைக்குச் செல்பவன் யானையையும் எளிதிற் பெறுவன், காடை வேட்டைக்குப் போகுபவன் அது பெறாமல் வெறுங்கையுடன் திரும்பினும் திரும்புவன். அதனால், உயர்ந்தவர்க்குத் தாம் செய்த நல்வினைப் பகுதியால், அதனை நுகர்தல் உண்டெனின், அவர் இருவினையும் செய்யாத உம்பர் உலகில் இன்பம் நுகர்தலும் கூடும். இல்லையாயின், மாறிப் பிறக்கும் பிறப்பு இல்லையாகவும் கூடும்; ‘மாறிப் பிறத்தலே இல்லை’ என்று கூறுவர் உளராயின், இமயச் சிகரம் ஓங்கினாற் போன்ற தமது புகழை நிலைநிறுத்தி வசையில்லாத உடம்போடு கூடிநின்று இறப்பது சிறந்ததாகும். அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தலே ஏற்புடைத்து.”[1]

எதிர்கால உணர்ச்சி: இங்ஙனம் சிறந்த அறவுரை புகன்ற அரசர் பெருந்தகை தன் பக்கத்தில் இருந்த சான்றோரைப் பார்த்து, “பாண்டிய நாட்டில் நெடுந்தொலைவில் உள்ள பிசிர் என்னும் ஊரைச் சேர்ந்த ஆந்தையார் என்ற எனது உயிர் நண்பன் இப்பொழுது இங்கு வருவன்!”[2] என்றனன். அதுகேட்ட சான்றோர், “பாண்டிய நாட்டிலிருந்து ஆந்தையார் இந்நெடுந்தொலைவு கடந்துவருதல் சாலாது”


  1. புறம், 214
  2. புறம், 215.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/91&oldid=481198" இலிருந்து மீள்விக்கப்பட்டது