பக்கம்:சோழர் வரலாறு.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

91



நரையில்லாதிருக்கக் காரணம் என்னை?’ என்று வியப்போடு கேட்டனர். அதற்குப் புலவர் புன்முறுவலுடன், “ஐயன்மீர், பெருமை பொருந்திய என் மனைவியும் மக்களும் அறிவு நிரம்பியவர். ஏவலர் என் சொற்படி நடப்பவர்! எமது பாண்டியன் முறை வழுவாது குடிகளைப் பாதுகாக்கின்றான்; எமது ஊரில் அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டு அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டே சான்றோர் பலர் வாழ்கின்றனர்.இந்நான்கு காரணங்களால் யான் நரை இன்றி இருக்கின்றேன்”[1] என்றார். கேட்டோர் வியந்தனர்.

ஆந்தையார் வடக்கிருத்தல்: மெய்யன்புடைய பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனுடன் வடக்கிருந்து உயிர் விடத் துணிந்தார். இதில் வியப்பில்லை அன்றோ? இதனைக் கண்ட கண்ணகனார் என்ற புலவர்.

“பொன்னும் பவளமும் முத்தும் மணியும் நிலம், கடல் முதலியவற்றில் உண்டாவன. இவை ஒன்றுக் கொன்று சேய்மைய ஆயினும், அரிய விலையினுடைய நல்ல அணிகலன்களைச் செய்யும்பொழுது அவை ஒரிடத்துத் தோன்றினாற்போல எப்பொழுதும் சான்றோர் பக்கத்தினர் ஆவர்.”[2]

என்ற பொருள்படத்தக்க பைந்தமிழ்ப் பாவால் பாராட்டி மகிழ்ந்தனர்.

பூதனார் பாராட்டு: கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்ற நல்லிசைப் புலவர், சோழர் பெருமான் வடக்கிருத்தலைக் கண்டு, “யாற்று இடைக்குறையுள் புள்ளிப்பட்ட மரநிழற்கண் இருந்த உடம்பாகிய முழுத் தசையை வாட்டும் வீரனே, நின் கருத்திற்கேற்ப நின்னோடு வடக்கு இருந்தார் பலராவர். யான் பிற்பட வந்தேன். நீ என்னை வெறுப்பை போலும்!”[3] எனக்கூறிவருந்தி நின்றனர்.


  1. புறம் 191; வாழ்க்கையில் இன்பம் நுகர விழைபவர் இதன் பொருளை நன்குணர்ந்து கடைப்பிடிக்கக் கடமைப்பட்டவராவர்.
  2. புறம் 218
  3. புறம் 219.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/93&oldid=1234329" இலிருந்து மீள்விக்கப்பட்டது