பக்கம்:சௌந்தர கோகிலம்-3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28O செளந்தர கோகிலம்

கோகிலாம்பாள் தனது கடைக்கண்ணால் அங்கிருந்த ஜனங்கள் எல்லோரையும் விரைவாகப் பார்த்து, இன்னின்னார் வந்திருந்தனர் என்பதை உடனே தெரிந்து கொண்டாள் தங்களது சொந்த ஜனங்கள் அத்தனை பேரும் தங்கள் பங்களாவிற்குள் வந்திருப்பர் என்பதையாவது, அத்தகைய சச்சரவுகள் ஏற்படும் என்பதையாவது கோகிலாம்பாள் கனவிலும் நினைத்தவளன்று ஆதலால், அத்தகைய எதிர்பாராத பயங்கரமான நிலைமையில் தான் அகப்பட்டுக் கொண்டதை உணரவே, அவளுக்குத் தனது உயிர் போய்விட்டது போலவே இருந்தது. அவமானத்தினாலும், மனவேதனையினாலும் அவளது தேகம் குன்றி உட்கார்ந்து போயிற்று. முகம் சடக்கென்று மாறி விகாரப்பட்டுப் போயிற்று. மனதோ, அயர்ந்து தளர்வுற்று செயலற்றுப் போய்விட்டது. அவள் உடனே தனது தாயின் நிலைமையையும் கவனித்துணர்ந்தாள். தான் இராயபுரம் பொன்னுரங்க முதலியாரது வீட்டிற்குப் போனதாகத் தனது தாய் கூறியதாக மூர்த்தி முதலியார் சொன்னதையும் அவள் கவனித்தாள். அந்தக் கும்பலில் பொன்னுரங்க முதலியார் இருந்ததையும் அவள் கண்டாள். ஆதலால், தான் அப்பொழுது அகப்பட்டுக் கொண்டதுபோல, தனது தாயும் பொய் சொல்லிவிட்டு எக்கச் செக்கமாக அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கிறாள் என்றும் கோகிலாம்பாள் உடனே யூகித்துக் கொண்டாள். உடனே அவளது மனத்தில் இன்னொரு முக்கியமான சந்தேகம் தோன்றியது. தனது தாய் தான் இராயபுரம் பொன்னுரங்க முதலியாரின் வீட்டிற்குப் போனதாகச் சொல்லி இருக்க, செளந்தரவல்வி அதை வேறு விதமாக மாற்றி, தான் திருவல்லிக்கேணிக்குப் போனதாகத் தனது தாய் சொன்னாளென்று கூறியதன் முகாந்தரம் எதுவாக இருக்கு மென்று அந்த மடந்தை சிந்தித்துப் பார்த்தாள். செளந்தரவல்லி தங்களை அத்தனை ஜனங்களுக்கும் முன்பு மானபங்கம் படுத்தும்பொருட்டு அவ்வாறு சூழ்ச்சி செய்திருப்பாளென்று அவள் சிறிதும் நினைக்கவே இல்லை. ஆதலால், செளந்தர வல்லியைப் பற்றி தப்பான எண்ணம் கொள்ள அவளது மனம் இடம் தரவில்லை; ஆகவே, தனது தாய் காலையில் வேலைக் காரனிடத்தில் ஒரு விதமாகவும், அப்பொழுது சொந்த ஜனங்களுக்கு முன்பு வேறு விதமாகவும் தகவல் கொடுத்திருக்க