பக்கம்:ஜனனி-சிறுகதைகள்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

228 லா. ச. ராமாமிருதம் யிருந்தோ பெருமாளைச் சேவிக்கணும்னு வராள்- நாம் இப்படிப் பக்கத்து ஊரிலேயிருந்துண்டே ஒரு தடவையாவது பார்க்காமலிருக்கிறதான்னு கூப்பிட்டால்-”

  "இதோ பார்- எனக்கு எங்கேயாவது போய்த் தலையை சாய்ச்சால் போறுமென்னிருக்கு. இத்தனை குழந்தையும் குட்டியும், மூட்டையும் முடிச்சுமாய்ப் போய், இந்தப் புண்ணியத்தைச் சம்பாதிச்சுண்டு வரணும்னு எனக்கு ஆசையே இல்லை." 
 “உங்கள் கூட்டமே நாஸ்திகக் கூட்டம்தானே- உங்களுக்கெல்லாம் ஒரே ஆசைதான்- புகையிலையைப் போட்டுண்டு கண்ட இடத்தில் துப்பவும் சீட்டாடிண்டு இருக்கவுமேயொழிய"
  "அம்மா, தாயே-” "நீங்கள் என்ன வேணுமானாலும் சொல்லலாம். நீங்கள் சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் தாய்தான்- நானும் கலம் பெத்தாயிடுத்து!”
 "ஐயோ, நம்ம வமிசாவளியெல்லாம் இங்கே வந்து கூடவா படிக்க வேண்டும்!”
 "ஏன் இப்படி-”
  இல்லை, மற்றதொன்றும் கேட்கவில்லை. வண்டியின் ஊதல் எல்லாச் சத்தத்தையும் அடக்கிவிடுகிறது.
  தடக்-தடக்-தடக்
  வண்டி விழுங்க விழுங்க, தண்டவாளம் திரெளபதியின் துகில்போல் நீண்டுகொண்டே போகிறது. அது வளைந்து சுழன்று மறுபடியும் வெறித்துச் செல்லும் ரீதியைப் பார்க்கையில் அதுவும் காலத்தைப்போல் எல்லையே அற்றது போலிருக்கிறது. எங்கெங்கெல்லாம் எப்படியெல்லாம் போகிறது! ஒர் இடத்தில் தாபத்தால் உடைந்த இதயம் போல், பூமி பளார் பளார் என்று அங்கங்கே, தண்ணிரே காணாமல்