பக்கம்:ஜீவாவின் பாடல்கள் தொகுப்பு.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேச சுதந்திரம் 1937-ல் கோவை பாப்பநாயக்கன்பாளையம் "லட்சுமி" மில்லில் தமிழக வரலாற்றில் பொன் எழுத்தில் பொறிக்கத் தக்க ஒரு வேலை நிறுத்தம் நடந்தது. செங்கொடியின் கீழ் திரண்டுள்ள இன்றைய தமிழகத் தொழிலாளி வர்க்கத்திற்கு அதுதான் வெற்றிகரமான மிகப்பெரிய ஆரம்பப் போராட்டம். பின்னால் பல வேலை நிறுத்தங்களுக்கு உணர்ச்சி ஊற்றாகவும், வழிகாட்டியாகவும் ஒளிவிட்ட வேலைநிறுத்தம் அது. லட்சுமி மில்லில் தொழிலாளர்கள் ஆலை நிர்வாகிகளிட மிருந்து நூற்றுக்கு நூறு விகிதம் கோரிக்கைகளையும் அந்த வேலை நிறுத்தத்தின் மூலம் பெற்றனர். அந்தக் காலத்தில் தலைகீழ் நின்றாலும் பெறுவது துர்லபமான சங்க அங்கீகாரம் என்ற அடிப்படை ஆதாரக் கோரிக்கையையும், போராட்டக் கோரிக்கையாக வைக்காவிட்டாலும் சமரசப் பேச்சின்போது வற்புறுத்திப்பெற முடிந்தது. தொழிலாளர்களிடம் அதுவரை காணாத எழுச்சியின் வேகத்தைக் கண்டு நிர்வாகம் அதிர்ச்சி யடைந்து வணங்க வேண்டியதாயிற்று. 23 நாட்கள் நாளொரு மேனியாக வளர்ந்து நடை பெற்ற அந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அன்று அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், காங்கிரஸ் சோஷ லிஸ்ட் கட்சியின் தமிழகக் கிளையின் செயலாளருமாகிய தோழர் ஜீவா சென்னையிலிருந்து கோவை சென்று நேரில் தலைமை தாங்கி நடத்தினார்.

90

90