பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை. எஸ். ஆறுமுகம் Δ 13



எத்துணை பாசம்! -எவ்வளவு நேசம்!- ‘எங்கள் தமிழ் மொழி’ என்று நெஞ்சம் நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் மார்தட்டிக் கூவி, எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி ! - என்றென்றும் வாழியவே! என்று நன்றியறிவும் நன்னம்பிக்கையும் முரசு கொட்ட வாழ்த்துப் பாடவில்லையா அமரகவி பாரதி?

இவ்வாறாகவே, அன்றுதொட்டு இன்றுவரை தன்னேரில்லா உயர்தனிச் செம்மொழியாக உலகரங்கிலே கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிற தமிழ் மொழியின் பட்டொளி வீசும் இலக்கியத்திலே,புதினத்துறை வாழ்வும் வளமும் பெறத் தொடங்கி, பொதுமக்கள் இலக்கியமாகப் புதிய மலர்ச்சி அடைந்து, வளர்ச்சி அடைந்து கொண்டிருந்த அந்த நாளில், அதாவது, அறுபது காலக்கட்டத்தில், நாவல் இலக்கியத்தில் தேக்கம் ஏற்பட்டு விட்டதாகத் திடுதிப்பென்று ஞானோதயம் பெற்றவரைப் போல ‘குறி’ சொல்லத் தொடங்கி விட்டார் திருவாளர் க. தா. சு.

அசலான இலக்கிய விமரிசகர் தானேதான் என்பதாக அந்நாளில் தம்பட்டம் அடித்துத் திரிந்த க. நா. சுவைக. நா. சு.வின் வாதத்தை- புதினத் துறையில் தேக்கம் ஏற்பட்டுவிட்டதாகப் புரளி கிளப்பிவிட்ட க.நா.சு.வின் இந்தக் கூற்றைப் பொய்யென்று மெய்ப்பிக்க வேண்டிய கடமைப் பொறுப்பை உணர்ந்த நான், அந்த க. நா. சு.வையே ஒரு பிரச்னை ஆக்கி, ‘க.நா.சு. பிரச்னை’ என்ற புதிய பகுதி ஒன்றையும் நான் ஆசிரியப் பொறுப்பேற் றிருந்த “உமா” ஏட்டில் ஆரம்பித்து, அவ்வரிசையில், தமிழ்ப் புதின இலக்கியத்துக்குப் புரட்சிமிக்க வாழ்வையும் புதுமை மிகுந்த வளப்பத்தையும் நல்கிய- நல்கி வந்த நாவலாசிரியர்கள் பற்றிய திறனாய்வையும் ஆரம்பித்தேன். இந்த இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைத் தொடரின் முதற்பகுதிதான் பின்னர், 1964ஆம் ஆண்டில், ‘கல்கி முதல் அகிலன் வரை’ என்னும் பெயரில் நூல் வடிவம் பெற்றது.