பக்கம்:ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20 Δ ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை



ஒரு நாள், சாயங்கால மழையில், கப்பல் போன்றதொரு காரில் கங்கா அனுபவித்த, அனுபவிக்க வாய்த்த அந்தக் கற்பின் விபத்திற்குப் பிறகு, அதாவது, சரியாக, பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதே கங்கா அதே பிரபுவை இனம் கண்டு, அவனோடு தொலைபேசியிலும் தொடர்பு கொள்கிறாள்.

பிரபு கெட்டிக்காரன் அல்லவா ? “...என்ன விஷயமா என்னைப்பார்க்கணும்?” என்று கேட்கிறான் அவன்.

அவள் பதட்டத்தையும் நடுக்கத்தையும் கட்டுப் படுத்திக் கொண்டவளாக, நிதானமாகவும் சாதாரணமாகவும் மிகுந்த செளஜன்யமான சொந்தத்தோடும், ஏன், பந்தத்தோடும் கூடப் பேசுகிறாள்: “என்ன விஷயம்னு டெலிபோன்லே சொல்லிடற மாதிரி, மேட்டர் இஸ் நாட் ஸோ ஸிம்ப்பிள். சாதாரணமான விஷயம் இல்லே. நான் உங்களை மீட் பண்றதே ஒரு முக்கியமான விஷயம். என்னைப் பார்த்திங்கன்னா, அப்ப உங்களுக்குப் புரியும். உங்க பேர் கூட எனக்கு நன்னாத் தெரியும். நாம ரெண்டு பேரும் பன்னெண்டு வருஷத்துக்கு முந்தி சந்திச்சு இருக்கோம் ; ஒரு நாள் மழை பெய்யறச்சே, சாயங்காலம் எங்க காலேஜ் வாசல்லே, பஸ் ஸ்டாண்டிலே... ஞாபகம். இருக்கா ? ஹலோ... ஹலோ... டு யூ ஹியர் மீ ?”

தொடர்பு தொடர்கிறது : “நீங்க என்னை உங்க. கார்லே ஏத்திண்டு போனேள் : ஞாபகமிருக்கா ? ஐலண்ட் கிரவுண்டுக்குப் போனோம். உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? இப்ப உங்களைப் பார்த்தா எனக்கு, அடையாளம் தெரியுமாங்கறது கூட எனக்குச் சந்தேகம் தான். அந்தக் கார் தான் எனக்கு அடையாளம் ஆனா: அதுக்கப்பறம் அந்தக் காரை நான் பார்க்கவே இல்லை. எதுக்குப் பார்க்கணும் ? அவசியம் இல்லே, ஆனா, இப்ப, அவசியமா உங்களை நான் மீட் பண்ணி ஆகணும்?"