பக்கம்:ஞானியார் அடிகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



35

என்னும் தலைப்பிலும், பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் 'தமிழ் இசைத்திறன்' என்னும் தலைப்பிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியரா யிருந்த ச. க. கோவிந்தசாமிபிள்ளை 'சோழர் காலத்திய கோயில்களும் ம்டங்களும்' என்னும் தலைப்பிலும் அரிய பெரிய கருத்துக்களை முன்வைத்துச் சொற்பெருக்காற்றி னர். அடிகளாரின் தொடக்க உரையும் முடிவு வாழ்த்து ரையும் நிகழ்ச்சிக்கு நயம் தந்து மெருகு ஊட்டின. இச் சொற்பொழிவாளர்கள் மயிலத்தில் நடைபெற்ற சமாச மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர் அங்கிருந்து அடிக ளாரைக் காண்பதற்கென்றே கோவலூர் வந்தவர்கள்.

திருவதிகைக் குட முழுக்கு

 விக்கிரம-ஆவணி-10 (23 6-1940) ஞாயிறு அன்று, திருவதிகைச் சிவன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடைபெற்றது. இது நடைபெற அடிகளார் எடுத்துக் கொண்ட முயற்சி மிகுதி. இவ்விழாவின் கூறாக,அடிகளார் தலைமையில் மூன்றுநாள் மாநாடு நடைபெற்றது. அறிஞர் பலரின் சொற்பொழிவுகளை,அடிகளாரின் தலைமை உரை அணி செய்தது. அடிகளார் இயற்றிய 'திலகவதி அம்மை யார்துதி' என்னும் சிறு செய்யுள் நூல் அங்கு வெளியிட்டு வழங்கப்பட்டது. பாடல்களைப் பலரும் படித்துச் சுவைத்து மகிழ்ந்தனர்.

திருமுதுகுன்றம்

 1941 - மார்ச்சு - விக்கிரம - மாசித்திங்களில் திருமுது குன்றம் (விருத்தாசலம்) பெருவிழா (பிரம்மோற்சவம) நடைபெற்றது. அங்கே அடிகளாரின் ஆதீன அருளகம் ஒன்றும் உள்ளது. அன்பர்களின் வேண்டுகோளை ஏற்று ஆங்குப் போந்து தலைமை தாங்கி, விழாச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் பொலிவூட்டினார் அடிகளார்.