பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

ஞாயிறும் திங்களும்



வேலைச் சுழற்றுங்கள்!
வேதனையை நீக்குங்கள் !!


நாட்டில் இயங்கிவரும் நாலுவகைக் கட்சிக்கும்
ஆட்டுந் தலைவருண் டாடிவருந் தொண்டருண்டு
தன்மானக் கட்சிக்குந் தக்க தலைவருண்டு
அன்பான தொண்டர் அளவில்லா வீரருண்டு
தொண்டர் தலைவரெனச் சொல்லளவில் நின்றாலும்
அண்டும் ஒருகுடும்பம் ஆனதுதான் நம்கழகம்
அய்யா எனவுரைத்தும் அண்ணா என அழைத்தும்
மெய்யான பற்றுளத்தால் மேம்பட்டு நின்றவர் நாம்
அண்ணா என அழைப்போம் அன்புள்ள தம்பீஎன்
றண்ணன் நமையழைப்பான்; அவ்வண்ணம் நாமிருந்தோம்
நூலொன்றால் கோத்தமைத்த நூறு வகைமணிகள்
போலொன்றி நல்லுறவு பூண்டு வளர்ந்தவர் நாம்
ஒன்றாக்கி நின்ற உறவுநூல் எப்படியோ
நன்றாக்குந் தோழர்க்குள் நாலாறு கூறுபட்டுக்
கட்டவிழ்ந்து வெவ்வேறாய்க் காணும் மணிபோல
ஒட்டுறவே யின்றி உதிர்ந்துகிடக் கின்றோம்
உறவு முறைகாண உள்ளவன்நான் வேறு
வரவு முறைகாண வந்து புகவில்லை
ஆதலினால் நம்கழகம் அல்லற் படும்போது
வேதனை கொள்கின்றேன் மீண்டும் உறவுமுறை
காணத் துடிக்கின்றேன் காளையரே முன்போலப்
பேணிச் செயல்செய்யப் பேருள்ளங் கொள்ளீரோ?
நாட்டை நினையுங்கள்! நாடாண்ட நம்மினத்தின்
பாட்டை நினையுங்கள் பைந்தமிழை எண்ணுங்கள்!
வீட்டின் தனிநலத்தைச் சற்றே விலக்கிவைத்து
நாட்டின் பொதுநலத்தை நாடுங்கள்! நாடிவிடின்
நானென்ற சொல்மறையும் நாமென்ற சொல்மலரும்
ஏனென்றால் தொண்டுக் கிலக்கணம் ஈதேதான்
அண்ணன் திருநாளில் அத்தலைவன் சொன்னவற்றை
எண்ணி நடந்திடவே இன்றும்மை வேண்டுகிறேன்
நேற்றை வரலாற்றை நெஞ்சில் நிறுத்துங்கள்