பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

17


ஏற்றை நிகர்வலியீர் இன்று நடப்பதையும்
சிந்தித் தெதிர்நிறுத்திச் சீர்தூக்கி நோக்குங்கள்!
வந்த இடரெல்லாம் வாயடங்கிப் போயொழியும்
நாளை எதிர்காலம் நன்றாக வேண்டுமென்றே
காளையருக் கிந்தக் கருத்தை மொழிகின்றேன்
என்னைத் தவறாக எண்ணி எடைபோட்டுப்
பின்னக் கணக்கைப் பிழையாகப் போடாதீர்!
கூடாரங் கூடார மாகக் குடிபுகுந்து
சூடாத பூக்கெய்து சூடிப் பழிசுமந்து
மானந் தனையிழந்து மற்றவர்தம் தாள்பிடித்துக்
கூனல் மனத்தோனாய்க் கொள்கையை விற்றதிலை
நேற்றொன்று கூறி நிலைநாட்டி இன்றதனை
மாற்றி யுரைக்கும் மதிசிறிதும் பெற்றதிலை
அன்றுநான் சொன்னதையே இன்றும் மொழிகின்றேன்
என்றுமதே சொல்வேன் இனிமேலா மாறிடுவேன்?
ஏற்றுங் கொடிதான் இருவண்ணம் என்னெஞ்சில்
ஏற்றும் எழில்வண்ணம் என்றும் ஒருவண்ணம்
கொச்சை மொழிபேசிக் கூட்டம் மிகச்சேர்த்துப்
பச்சைப் புளுகால் பலபேரை ஏமாற்றிக்
கச்சேந்தும் மாதர் கலவிக் கதைகூறிப்
பச்சோந்தி போலப் பலவண்ணங் காட்டேன் நான்
மெச்சும் மொழிபேசி மேன்மைக் கருத்துரைத்
தச்சம் சிறிதுமின்றி அல்லல் எதுவரினும்
துச்சம் எனமதித்துத் தொண்டுசெயத் தன்மானக்
கச்சைகட்டி நிற்கும் கடப்பா டுடையவன்நான்
ஈரோட்டு வேந்தர் எடுத்த இனவெழுச்சிப்
போராட்டப் பாசறைக்குட் போய்ப்புகுந்த நாள்முதலே
நீர்க்கோல வாழ்வில் நெடிதே துயருறினும்
போர்க்கோலம் மாறவிலை புத்திடு மாறவில்லை
கோட்டுக்குள் கோடு குதிக்கும் கவியாகி
நாட்டைக் கெடுக்கும் நயவஞ்சங் கொண்டதிலை
கேட்டுக்குக் கேடு கிளர்ந்தெழுந்து தாக்கிடினும்
நாட்டை யுருவாக்க நாளும் நினைப்பவன் நான்
பாடென்ன பட்டாலும் பண்பாட்டை எந்நாளும்
பாடுபட்டுக் காக்கப் பழகி நடப்பவன்நான்
சங்கமெனுந் தோட்டத்தில் சாற்றுச் சுவைமிகுந்து
தொங்குங் கவிப்பழங்கள் துய்த்துப் பழக்கமுண்டு
யாப்பமைந்த பாடல் இயற்றித் தருவதற்குக்
கோப்பைப் பழங்கள் குடித்துப் பழகவில்லை