பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஞாயிறும் திங்களும்



உடல்நலமும் உயிர்நலமும் கருதா தெங்கள்
       உயர்வுக்கே உள்ளளவும் உழைத்திருந்தாய்
விடுமுயிரைத் தாழ்ந்திருக்கும் தமிழி னத்தின்
       விடுதலைக்கே விடுவேன்என் றுழைத்து நின்றாய்
அடலரியே ஆருயிரே எம்மி னத்தின்
       அடிமைதனை அகற்றவந்த தலைவா நாங்கள்
படுதுயரை எவ்வண்ணந் தாங்கிக் கொள்வோம்?
       பகலவனே பயணத்தை ஏன்மு டித்தாய்?

கண்மூடிக் கிடந்துழன்ற தமிழி னத்தைக்
       கண்டுமனம் நொந்தெழுந்து தட்டித் தட்டிக்
கண்திறக்க வைத்தாயே! திறக்கும் போது
       கண்ணெல்லாம் குளமாகச் செய்து விட்டுக்
கண்மூடிக் கொண்டாயே! அய்யா உன்றன்
       கடமைஎலாம் முடிந்ததென்றோ? நினது மெய்யை
மண்மூடிக் கொண்டாலும் அய்யா எங்கள்
       மனமெல்லாம் நீயிருக்கத் திறந்து வைத்தோம்.

கண்மூடிக் கிடந்தாலும், எங்கட் காகக்
       காலமெலாம் உழைத்துழைத்துப் பழுத்த மெய்யை
மண்மூடிக் கிடந்தாலும், துயரம் எங்கள்
       மனமூடிக் கிடந்தாலும், கண்க ளெல்லாம்
தண்ணீரிற் கிடந்தாலும் எமக்குத் தந்த
       தன்மானப் புத்தகத்தை மூட மாட்டோம்;
கண்மூடிப் பழக்கங்கள் சாயும் மட்டும்
       கடமைப்போர் ஆற்றுவதில் ஓய மாட்டோம்.

ஈரோட்டுப் பாசறையில் பயிற்சி பெற்ற
       எதையுமஞ்சாப் போர்வீரர் சூழ்ந்து நிற்கப்
போராட்டம் போராட்டம் என்று சொல்லிப்
       போராடிக் காலமெலாம் வாழ்ந்த வேந்தே!
நீரோட்டம் அற்றாலும் எங்கள் நெஞ்சில்
       நீகாட்டும் போராட்டம் ஓய்வ தில்லை;
வேரோட்டும் பேரால மரமே உன்றன்
       விழுதுகளாய் நின்றிருந்து கொள்கை காப்போம்.

(தந்தை பெரியார் இயற்கை எய்திய செய்தி கேட்டுப் பாடியது 24.12.1974)