பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

27




கல்லடர்ந்து முள்ளடர்ந்து கள்ளி முள்ளி
       கற்றாழை மிகவடர்ந்து புதர டர்ந்து
செல்வழிகள் தோன்றாமல் திகைத்து நிற்கச்
       சீர்கெட்ட பாதையெலாம் செப்ப னிட்டு
நல்வழிகள் பலஅமைத்துப் புதுமை மிக்க
       நாடாக்க வளமாக்க உழைத்த போது
பல்லிடர்கள் உற்றாலும் ஆரி யத்தின்
       பாம்பெதிர்த்து வந்தாலும் அயர்ந்தா ரல்லர்.

அஞ்சாத அரியேறு, கொடுஞ்சி றைக்கும்
       அடங்காத புலிப்போத்து, வாழ்நாள் எல்லாம்
துஞ்சாத போர்க்களிறு, கொண்ட கொள்கை
       துவளாத பெருங்கரடி, எவரை யும்போய்க்
கெஞ்சாத கவரிமான், உழைப்பில் சோம்பிக்
       கிடவாத அடலேறு, முதுமை யுற்றும்
எஞ்சாது பாடுபடும் பொழுது துள்ளி
       எழிலாகப் பாய்கலைமான் எங்கள் தந்தை.

ஊர்தோறும் பம்பரம்போல் சுற்றிச் சுற்றி
       உழைத்துவரும் அந்நாளில் அறியா மாந்தர்
பேர்கூறி வைதார்கள், நடையன் முட்டை
       பிறவெல்லாம் எடுத்தெறிந்தார், கூச்சல் போட்டார்
ஊர்கூடிக் குழப்பத்தை விளைத்து மேடை
       ஒளிவிளக்கை அறுத்தெறிந்தார், பாம்பை விட்டார்
பார்கூடித் திரண்டெதிர்த்தும் இகழ்ந்து பேசி
       யாதுரைத்தும் நம்தலைவர் கலங்க வில்லை.

தேரோட்டி விழவெடுக்குங் கூட்டத் தாரும்
       தெருவெல்லாம் கல்வைத்துப் பூசிப் பாரும்
ஏரோட்டி உழைப்பாரும் கற்ற மாந்தர்
       எழுத்தாளர் மற்றோரும் விழித்தெ ழுந்தார்
ஈரோட்டுப் பாசறையில் வந்து சேர்ந்தார்
       இனவுணர்வும் மொழியுணர்வும் பெற்ற பின்னர்
தார்குட்டி எடைக்கெடையில் பொருள்கொ டுத்தார்
       தலைவரவர் பொருள்புகழால் மயங்க வில்லை.