பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிப்பெருங்கோ முடியரசன்

33



புயல்போலச் சினந்தெழுந்து வீசி னாலும்
       பூமணக்கும் தென்றலென இனிமை செய்வார்.

பகலவனும் குளிர்மதியும் விண்ணுக் குண்டு
       பார்ப்பவர்கள் அளந்தறியா அகலம் உண்டு
பகுத்தறிவுப் பகலவனும் ஆயந்து தோய்ந்து
       பண்பட்ட கூர்மதியும் அளந்து பார்த்துப்
புகலறியாச் சிந்தனையும் பெரியார்க் குண்டு
       பொலிவுதரும் ★[1]உடுக்கணங்கள் விண்ணுக்குண்டு
புகழ்பரப்பும் தொண்டருடுக் கணம்போற் சுற்றிப்
       பொலிவுதரும் விண்ணாகி விளங்கு கின்றார்.

அனைத்துலக மாந்தரெனும் குமுகா யத்துள்
       ஐயாவும் ஓரணுவே; அணுவின் ஆற்றல்
கனைத்துவரும் ஆரியமாம் நாக சாகி
       கனல்விழுந்த பஞ்சாகிப் பொசுங்க வீழ்த்தும்;
மனத்துவளர் மடமையெனும் கோட்டை எல்லாம்
       மண்ணோடு மண்ணாகத் தூள்தூள் ஆக்கும்;
இனத்துணர்வைப் பகுத்தறிவை ஆக்கும் ஆற்றல்
       எந்நாளும் அவ்வணுவுள் நிறைந்தி ருக்கும்.

திருத்தலங்கள் திருக்கோவில் வேண்டா என்று
       தெரிவித்தார் நம்பெரியார்; அவர்தம் பேச்சை
மறுத்துரைக்க இயலவில்லை; என்றா லும்நான்
       மறுக்கின்றேன்; தன்மான இயக்கத் தார்க்குத்
திருத்தலங்கள் மூன்றுண்டு; நம்மை உய்யச்
       செய்கின்ற வழிகாட்டும் தலங் ளாகும்;
பொறுத்திருந்தால் என்மொழிக்குப் பொருள்வி ளங்கும்
       புனிதமிகு தலங்களென ஏற்றுக் கொள்வீர்.

பாரோடு நம்நாடு சமமாய் நிற்கப்
       பகுத்தறிவுக் கொள்கைஒளி பரவி நிற்கப்
பேரோடு புகழோடு தமிழி னத்தார்
       பிறரோடு தலைநிமிர்ந்து வாழ்ந்து காட்டப்
பேரேடு பெற்றிலங்கும் தமிழ்மொ ழிக்குப்
       பேரிடர்கள் வாராமல் தடுத்துக் காக்க
ஈரோடு காஞ்சிபுரம் ஆரூர் என்னும்
       இம்மூன்றும் நம்மவர்க்குத் தலங்கள் அன்றோ?


  1. உடுக்கணம் - விண்மீன் கூட்டம்