பக்கம்:ஞாயிறும் திங்களும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிப்பெருங்கோ முடியரசன் முன்னுரை ஞாயிறு வெம்மை தருவது, திங்கள் தண்மை தருவது. இரண்டும் பொருளை விளக்கிக் காட்டுவன. அவ்விரண்டும் ஒளி தருவன. உலகிற்கு இரண்டுமே இன்றியமையாதன. - தந்தை பெரியார் பேச்சு, சூடானது. அவரே தம்மைப் பற்றி நான் அறுவை மருத்துவன். எப்படியும் நோயாளி உயிர் பிழைக்க வேண்டும் என்பது தான் என் நோக்கமே தவிர, நோயாளிக்கு வலிக்குமே என்று கவலைப்படமாட்டேன் என்று கூறியிருக்கிறார். பேரறிஞர் அண்ணா பேச்சு, குளிர்ச்சியானது. நோயாளி நலம் பெற வேண்டும். நோயாளி முகஞ்சுழிக்காமலும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் அவர் கூட்டு மாத்திரை தரும் இயல்பினர். இவ்விரு பேச்சும் பிணி வாய்ப்பட்ட தமிழினத்திற்கு எக்காலத்தும் வேண்டப்படுவனவே. ஆதலின் பெரியாரை ஞாயிறாகவும், அண்ணாவைத் திங்களாகவும் குறிப்பிட்டு, அவ்விருவரையும் பற்றிப் பாடிய பாடல்களைச் சேர்த்து ஞாயிறும் திங்களும் எனப் பெயரிட்டுள்ளேன். தமிழினம் பிணிநீங்கி, நலம் பெற்றுய்வதாக. திரும்பத் திரும்பப்பாடுவதால், ஒரே கருத்து மீண்டும் மீண்டும் காணல் கூடும். அதனைக் கூறியது கூறலாகக் கருதாது. வற்புறுத்துவதற்காகக் கூறப்பட்டது எனக் கொள்ள வேண்டுகிறேன். 7–10–1990 காரைக்குடி முடியரசன் -(காணிக்கை) தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மூவரோடும் தொடர்ந்து தொண்டாற்றி, தன்னலங்கருதாது, குடும்பத்துடன் பணிபுரிந்து வந்த அண்ணன் இராம. சுப்பையா அவர்களுக்கும் அவர்தம் துணைவியார் விசாலாட்சி அம்மையார் அவர்களுக்கும் இந்நூலைக் காணிக்கையாக்கி மகிழ்கின்றேன். முடியரசன்