பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

3

ஒரு காரணம் உண்டு. கடைசி முறையாகக் குடித்தபோது அவன் தனது மேல் சட்டையையும் தோல் பூட்ஸையும் ‘தலைமுழுக’ நேரிட்டது. அதனால் இனி மேல் குடிப்பதில்லை என்று அவன் சபதம் செய்து கொண்டான். அன்று முதல் இரண்டு மாதகாலம் அவன் தனது வைராக்கியத்தைக் காப்பாற்றி விட்டான். இப்பொழுதும் காத்து வந்தான். பண்டிகையின் முதல் இரண்டு தினங்களிலும் எங்கு பார்த்தாலும் குடிமயம்; ஆயினும் மது ஆசையை எதிர்த்துச் சமாளித்து விட்டான் அவன்.

நிகிட்டா பக்கத்து கிராமம் ஒன்றைச் சேர்ந்த ஒரு விவசாயி. ஏறத்தாழ ஐம்பது வயதிருக்கும் அவனுக்கு ‘சரியான நிர்வாகி அல்ல’ என்று இதர விவசாயிகள் அவனைப்பற்றிக் குறிப்பிடுவது உண்டு. அதாவது, அவன் வீட்டோடு இருந்து சிக்கனமாக வாழ்க்கை நடத்தும் குடும்பத் தலைவன் அல்ல; வீட்டைவிட்டு வெளியேறி கூலியாளாகவே பெரும்பங்கு காலத்தை ஓட்டுகிறவன். சுறுசுறுப்பு, சாமர்த்தியம், வேலையில் உறுதி, இவற்றிக்கெல்லாம் மேலாக இரக்கமும் இனிமையும் நிறைந்த அவனது சுபாவம் ஆகியவற்றினால் அவனுக்கு எங்குமே தனி மதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அவன் எந்த இடத்திலும் நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. ஏனென்றால் வருஷத்திற்கு இரண்டு தடவைகள்—அல்லது அதைவிட அதிகமாகவே—குடிவெறி அவனைப்பற்றிக் கொள்ளும். அப்பொழுதெல்லாம் அவன் தனது உடுப்புகள் அனைத்தையும் குடியிலே தொலைத்து விடுவான். அத்துடன், அமைதியற்றவனாகவும் சண்டைக்காரனாகவும் மாறிவிடுவான்.