பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டு பேர்

117

பேசிக் கொள்வது போலவே இதையும் குறிப்பிட்டான் அவன்.

இப்படி ஒரு மணி நேரம், இரண்டு மணி, மூன்று மணி என்று வாஸிலி ஆன்ட்ரீவிச் படுத்துக் கிடந்தான். ஆனால் கால ஓட்டத்தின் கணக்கு அவன் பிரக்ஞையில் படவேயில்லை. முதலில், பனிச் சூறாவளி, வண்டிச் சட்டங்கள், சட்டத்தினூடே நின்று அவன் கண்முன்னாலேயே நடுங்கிக் கொண்டிருந்த குதிரை ஆகியவற்றின் நிழல்கள் அவன் மனவெளியில் ஊர்ந்து சென்றன. பிறகு, தனக்குக் கீழே கிடக்கும் நிகிட்டாவின் நினைப்பு அவனுக்கு வந்தது. பிறகு, பண்டிகை, அவன் மனைவி, போலீஸ் அதிகாரி, மெழுகுவர்த்திகள் நிறைந்த பெட்டி ஆகிய நினைவுகள் நிழலிட்டுக் குழம்பின. மறுபடியும் நிகிட்டாவின் நினைவு. ஆனால் இம்முறை அவன் அந்தப் பெட்டிக்கு அடியில் படுத்துக் கிடந்தான். அப்புறம், குடியானவர்கள், வாடிக்கைக்காரர்கள், வியாபாரிகள் தோன்றி மறைந்தார்கள். தகரக் கொட்டகை போட்ட களஞ்சியத்தோடு கூடிய தனது வீட்டின் வெள்ளை நிறச் சுவர்கள் தோன்றின. அவற்றின் கீழே நிகிட்டா கிடந்ததாகத் தோன்றியது. பின்னர் இவ் வெல்லா நிழல்களும் கலந்து குழம்பி ஒன்றாகி சூன்யத்தில் ஐக்கியமாகி விட்டன. வானவில்லின் வர்ணங்கள் அனைத்தும் ஐக்கியமாகி ஒரே வெள்ளொளியாகப் பரிணமிப்பது போல்தான், வெவ்வேறு விதமான நிழல்கள் பலவும் ஒன்றுபட்டுக் கலந்தன. முடிவில், அவன் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

நெடுநேரம், கனவு எதுவும் இல்லாமலே உறங்கினான் அவன். ஆனால் விடிவதற்குச் சிறிதுநேரம்