பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

டால்ஸ்டாய் கதைகள்

பனி, காற்றில் அடிபட்டுச் சுழன்று, குளிக்கும் அறையை ஒட்டிய திருப்பத்தில் சுற்றி மிதந்து கொண்டிருந்தது.

நிகிட்டா வண்டியை முற்றத்திலிருந்து வெளியே கொண்டு வந்து குதிரையை வீட்டின் பக்கமாக திருப்புவதற்கு முன்னதாகவே வாஸிலி ஆன்ட்ரீவிச் பாய்ந்து வந்தாள். வீட்டின் முன்பக்கத்தில் உள்ள நடைவாசலில், சிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருந்தான் அவன். துணி மூடிய ஆட்டுத்தோல் கோட்டு அவன் தேகத்தில் இறுகப் படிந்திருக்கும்படி இடுப்பருகே கச்சையிடப்பட்டிருந்தது. அவன் அடிஎடுத்து வைத்ததும், பலர் காலில் மிதிபட்டு இறுகியிருந்த பனி கூட அவனது கால்களில் கிடந்த தோல் பூட்ஸின் கீழ் கீச்சிட்டு நெகிழ்ந்து கொடுத்தது.

வாஸிலி முன்னால் வந்து நின்று, சிகரெட்டைக் கடைசி முறையாக ஒரு 'தம்' இழுத்துவிட்டு, கட்டையைக் கீழே போட்டுக் காலால் நசுக்கினான். மீசையினூடாகப் புகை தெளியும்படி மூச்சு விட்டான். முன்னேறி வந்துகொண்டிருந்த குதிரையை ஓரக்கண்ணால் கவனித்தவாறே, தோலினாலான கழுத்துப்பட்டையை அவன் சரிப்படுத்திக் கொண்டான். சிவந்து ஆரோக்கியமாகக் காணப்பட்ட அம் முகம் க்ஷவரம் செய்யப்பட்டு ‘மழ மழ’ வென்றிருந்தது. அதனால் மீசை மட்டும் எடுப்பாக விளங்கியது. அவனது சுவாசத்தினால் கழுத்துப் பட்டையில் ஈரம் கசிந்து விடக்கூடாதே என்கிற எச்சரிக்கையோடு, முகத்தை ஒட்டிய இருபுறங்களிலும் அவன் அதைச் சொருகி உள்ளே அடக்கமாக இருக்கும்படி செய்தான்.