பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

டால்ஸ்டாய் கதைகள்

ஞாபகம் வந்தது அவனுக்கு. சில்லறை வேலை செய்கிறவன் நினைப்பும் எழுந்தது. தன்னுடைய சின்ன மகளையும், வசந்த காலத்திற்குள் அவனுக்காகத் தான் ஒரு குதிரை வாங்கிவிடத் தீர்மானித்ததையும் அவன் எண்ணினான். ஆகவே, அவன் மறுதளித்தான்.

நான் குடிப்பதில்லை. அன்பு நிறைந்த வந்தனம் என்று சொல்லி, முகத்தைச் சுழித்துவிட்டு, இரண்டாவது ஜன்னலுக்கு அருகே கிடந்த பெஞ்சு மேல் உட்கார்ந்தான் அவன்.

‘அது என்?’ என்று கேட்டான் மூத்தவன்.

‘நான் குடிப்பதில்லை. அவ்வளவுதான்’ என்று நிகிட்டா, கண்களை உயர்த்திப் பார்க்காமலே பேசினான். ஆனால் அவன் ஓரக் கண்ணினால் தனது குறைச்சலான தாடியையும் மீசையையும் பார்த்துக்கொண்டே அவற்றிலிருந்த பனித்துகள்களை அப்புறப்படுத்துவதில் முனைந்து விட்டான்.

‘அவனுக்கு அது நல்லதல்ல’ என்றான் வாஸிலி. ஒரு கிளாஸ் மதுவைக் காலி செய்த பிறகு, கடினமான பிஸ்கட் ஒன்றை வாயில் போட்டுக் கடித்துக் கொண்டிருந்தான் அவன்.

‘அப்படியானால் சரிதான். கொஞ்சம் டீ சாப்பிடேன். குளிரினால் நீ முழுக்க முழுக்க விறைத்திருப்பாயே’ என்று அன்பார்ந்த வீட்டுத் தலைவி சொன்னாள். ‘பெண்களாகிய நீங்கள் அந்த ஸமோவாரை வைத்துக் கொண்டு ஏன் வீண்பொழுது போக்குகிறீர்கள்?’ என்றும் சொன்னாள்.

அங்கிருந்த இளம் பெண்களில் ஒருத்தி ‘இதோ தயாராகி விட்டது’ என்றாள். அவள் தனது முன்றானை-