பக்கம்:டால்ஸ்டாய் கதைகள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

டால்ஸ்டாய் கதைகள்

மதுக் கடைகள் இரண்டு, ஒரு மாவு மில், தானியக் கிடங்கு ஒன்று, குத்தகையில் உள்ள பண்ணைகள் இரண்டு, தகரக் கூரை போட்ட களஞ்சியத்துடன் ஒரு வீடு என்று அவன் பெருமிதத்துடன் நினைத்தான்.

‘எங்கள் அப்பா காலத்தில் இருந்த நிலைமை மாதிரி இல்லை. சுற்று வட்டாரம் பூராவும் யாரைப் பற்றிப் பேசிக்கொள்கிறார்கள்? வாஸிலி பற்றித்தான். ஏன்? தொழில் முறையில் தீவிரம் காட்டுவதனால் தான். நான் சிரமம் எடுத்துக்கொள்கிறேன். படுத்துத் தூங்கியும் அசட்டுத்தனங்களில் பொழுது போக்கியும் அநாவசியமாகக் காலம் கடத்துகிற மற்றவர்களைப் போல் இல்லை நான். இரவு நேரங்களில் கூட நான் தூங்குவது கிடையாது. பனிச் சூறையோ, பனிச் சூறை இல்லையோ, நான் புறப்பட்டு விடுகிறேன். அதனாலே தொழில் நிறைவேறி விடுகிறது. பணம் பண்ணுவது வெறும் தமாஷ் என்று நினைக்கிறார்கள் பலர். அப்படி இல்லை. கஷ்டப்படு. மூளைக்கு வேலை கொடு! இது போல் வெறும் வெளியில் ராத்திரி நேரத்தைக் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். எத்தனையோ இரவுகளில் தூக்கமே பிடிக்காமல், மண்டைக்குள் சுழல்கிற எண்ணங்களின் காரணமாகத் தலையணையைத் திருப்பித் திருப்பிப் போட வேண்டியதாகும்!’ என்று அவன் இறுமாப்புடன் எண்ணினான். ‘அதிர்ஷ்டத்தினால் அநேகர் முன்னுக்கு வந்து விடுவதாக எல்லோரும் நினைக்கிறார்கள். சரி, மிரோனோவ் குடும்பத்தினர் இப்பொழுது பல லட்சங்களுக்கு அதிபதிகள் ஆகிவிட்டார்கள். அது எதனால்? சிரமப்பட்டு உழைத்தால் கடவுள் கொடுக்கிறர். அவர் எனக்கு நீண்ட ஆயுளைமட்டும் அருள் புரிவாரானால் ..!’