உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியூர்க் கேசிகன்

25


இதனைக் கேட்டு ஒளவையாரும் தளர்ந்தனர் இல்லை. அவர்களது உள்ளம் காழ்கொண்ட பகைமையின் காரணமாக மேலும் சிறுகுவதையே அவர் கண்டார். மீண்டும் அறவுரை கூறுவதற்கு முற்படுவாராக,

யாவர் ஆயினும் கூழை தார்கொண்
டியாம் பொருதும் என்றல் ஒம்புமின் ஓங்குதிறல்
ஒளிறிலங்கு நெடுவேன் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.
(புறம் 88)

என்கின்றார். 'எம் தலைவனைக் காணாததன் முன்பாக யாவராயினும் பொருதும் என்று கூறுங்கள், நேரிற் கூறினீராயின் நீர் அழிவதுதான் உறுதி எனக் கூறும் சொற்கள், உண்மையின் வெளிப்பாடே என்பதனை அச்சொற்களுள் ஒலிக்கும் கம்பீரமே நமக்கு வலியுறுத்தும்.

ஒளவையாரின் அறிவுரைகளைக் கேட்டுத் திருத்தம் உறுகின்ற தெளிவு அந்தப் பகைவரிடம் உண்டாக வில்லை. அவர்களுள் ஒருவன், ஒளவையாரிடம் சிறிது ஆத்திரமாகவே, கேட்கின்றான்:

‘இழையணிப் பொலிந்த ஏந்துகோட் டல்குல்
மடவரல் உண்கண் வாணுதல் விறலி
பொருநரும் உளரோநும் அகன் தலை நாட்டு?’

என வினவியவனாகத் தன் பரந்த மார்பை நிமிர்த்துக் காட்டியபடி நிற்கின்றான். அவன் கேள்வியில் ஒலித்த எள்ளல். ஒளவையாரைப் பெரிதும் புண்படச் செய்கின்றது. பொருபடை வேந்தே' என் அவனை விழித்தவராக, அவனுக்கு மாற்றங் கூறவும் முற்படுகின்றார்:

எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே, அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
அதுபோர் என்னும் என்னையும் உளனே!
(புறம் 89)

என்கின்றார்.

“அடிக்கும் கோலுக்கும் அஞ்சாதாய்ச் சீறிவரும் பாம்பைப் போன்றவரான இளைய வலிய வீரர்கள் பலர் எம் நாட்டிடத்தே உள்ளனர்.

“அஃதன்றியும், மன்றினிடத்தே தூங்கும் பிணிப்புற்ற முழவினது, காற்றெறிந்த, தெளிந்த ஓசையுடைய கண்ணின்கண்