உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தகடூர் யாத்திரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

தகடூர் யாத்திரை


ஒருநாட் செல்லலம், இருநாட் செல்லலம்
பலநாட் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ!

தமிழன்பின்கண் தகைமை சான்ற பெருமையுடையானாக வாழ்ந்திருந்த அதிகமான், அங்ஙனமே பிற நலங்களினும் எள்ளளவுங் குன்றாத சிறப்பினனாகவே திகழ்ந்துள்ளனன். இதனை ஒளவையார் பல செய்யுட்களாற் கூறியுள்ளனர். அவன் நினைவை என்றும் நிலைபெறுத்தியும் சென்றுள்ளனர். இவற்றையும் நாம் காண்போமாக:

அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறுஉங் காலம்
நீட்டினும் நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யா காதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டா வாழ்கவன் தாளே.
(புறம் 101)

ஒரு சமயம், வேளிர் தலைவர்களுட் சிலர், வளர்ந்து வருகின்ற அதிகமானின் பெருமையைக் கண்டு மனங்கொதிப்புற்றவராயினர். அவர்கள் கொதிப்பிற்குச் சேரரும், சேரரின் துணைவராகத் திகழ்ந்த மலையமானும் தூபமிட்டு வருகின்றனர். அவர்கள் அதிகமானை அழித்து விடுதற்கு எண்ணிப் படை திரட்டி வருகின்றனர். அவர்களது நிலையைக் கண்டதும் ஒளவையாருக்கு நகையே தோன்றுகின்றது. அவர்கள் பாற்சென்று:

"பகைவர்களே! போரிடுதலை மேற்கொண்டு போர்க்களத்தே புகுதலை மட்டும் விட்டுவிடுவீராக. எம் பக்கத்துள் ஒரு வீரன் இருக்கின்றான். ஒரு நாளைக்கு எட்டுத் தேர்களைச் செய்துவிட வல்லானொரு தச்சன் ஆகியவன், ஒரு திங்கள் வரைக்கும் வேலைசெய்து வடித்த தேர்க்காலைப் போன்ற உறுதியுடையவன் அவன்” என்கின்றார்.

களம்புகல் ஓம்புமின் தெவ்விர் போரெதிர்ந்து;
எம்முளுள் உளனொரு பொருநன்;
வைகல் எண்தேர் செய்யுந் தச்சன்
திங்கள் வலித்த கால்அன் னோனே.
(புறம் 87)

ஒளவையாரின் இந்தச் சொற்களால் பகைவரது சீற்றம் மிகுதியாகின்றது. “எங்களுள் ஏதும் வீரத்திற்குக் குறைவில்லை. எங்களது படையணிகளும் தூசிப்படையும் எவரையும் வென்று வாகைசூடும் திறத்தன. ஆதலின், யாம் கொண்டது முடிப்போம். அஞ்சிக்கு அஞ்சலோம்" என்கின்றனர்.