பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இருட்டில் நின்ற...

யில் நின்றுவிட்டது. வெளியே இருட்டு. ஒரு உவமை சொல்ல முடியாத அளவுக்கு நல்ல இருட்டு. சிலர் என்ன நடந்தது என்று பார்க்க ஜன்னல் வழியே வெளியே தலையை நீட்டினார்கள். இன்னும் சிலர் கதவுப் பக்கமாய் நடந்தார்கள். ஏதாவது விபத்து நடந்திருக்கும் என்று பேசிக் கொண்டார்கள்.

கணேசன் மெதுவாய் சோம்பல் முறித்துக்கொண்டே ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். கீழே ஒரு பெண், மேல்பர்த்தில் படுத்திருந்த அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள். அவன் புகையை ஊதியபோது சற்று முகத்தைச் சுளித்தாள். அவன் அவளை அலட்சியப்படுத்திவிட்டுக் கூட்டத்தைப் பார்த்தான்.

கீழே இறங்கியவர்களைப் பார்த்து ரயிலில் இருந்தவர்கள் என்ன ஆயிற்று என்று ஜன்னல் வழியாய்க் கேட்டார்கள். பதில் வராது போகவே இவர்களும் இறங்கிப் போனார்கள்.

கணேசன் கீழே இறங்கி வந்தான். அந்தப் பெண் இன்னும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நல்ல நாட்டுக் கட்டை என்று மனசுக்குள் அவளைப் படுக்க வைத்தான். ரயிலை விட்டுக் கீழே இறங்கியபோது வெளியின் இருட்டு அதிகமாய்த் தெரிந்தது. கீழே எல்லோரும் குறுக்கு நெடுக்குமாய்ப் போய்க் கொண்டிருந்தார்கள். அவன் சற்று நிதானமாய்ப் பார்த்தபோது ரயில் பாதையை ஒட்டி ஒரு பெரிய ஏரி இருந்ததைப் பார்த்தான். வலது பக்கத்தில் ஒரு பசுமையான வயலில் சலசலப்பை உணர முடிந்தது. எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருட்டில் குரல்களின் வித்தியாசம் துல்லியமாய்க் கேட்டது. இன்னும் எவரும் உண்மையான காரணத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. காரணம் என்ன என்பதே அவர்களுக்கு அவசியமில்லாதது போல் தெரிந்தது. ஆனால் பேசிக் கொண்டிருக்க ஏதாவது ஒரு காரணம் போதும் என்பது போல் பேசினார்கள்.

கணேசனைக் கடந்து போன சிலர் அவனிடமும் விசாரித்தார்கள். அவன் தெரியாது என்று பதில் சொன்னவுடன் அதை எதிர்பார்த்ததே போல் மற்றவர்களிடம் கேட்கப்