பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

179


கிழிந்து போன இரண்டு உள்ளங்கள்! தகப்பன்-மகள், தணலில் தவிக்கும் புழு! தாங்கொணா வேதனைப் புயலில் சிக்கிய தளிர்!

காந்தாவின் நீண்ட பெருமூச்சும், அந்த மூச்சைத் தொடர்ந்து முனகிக் கொண்டே கிளம்பிய சின்னச்சாமியின் அசைவும்! அந்தோ... பரிதாபமான நிலைமை!

“அட பாழாய்ப்போன கடவுளே! அவர்கள் என்ன பங்களாவா கேட்கிறார்கள்? பட்டு மெத்தையும், பவளக் கட்டிலும், பன்னீர் குளியலும், பாதாம்பரும்பும், பசும்பாலுமா அவர்கள் கேட்பது? பணக்காரனின் இருதயப் பசிக்கு எத்தனை இளம்பெண்கள் பலியிடப்படுகிறார்கள்! காசை வீசியெறிந்து நினைத்த இடத்தில் இந்திரனாக மாறும் மனித மகாவிஷ்ணுக்களையும்; வயிற்றையும், நெஞ்சையும் உடலுணர்ச்சிகளையும் உலரப்போட்டு வற்றலாக்கிக் கொண்ட வறுமை உருவங்களையும் “ஆண்டவன் படைப்பு” என்று சொல்ல மனித அறிவு அவ்வளவு மழுங்கியாவிட்டது” அந்தச் சிறிய வீடு இதைத்தான் உரத்த குரலில் அதட்டிப் பேசுவது போலிருந்தது.

சின்னசாமியின் மனம் தொடர்ந்து பேசத் துவங்கிற்று:-

‘பணமில்லையென்றால் அவனுக்கு வாழ்வு கிடையாதா? உணர்ச்சி கிடையாதா? கடவுளே! ஏழைகளுக்கு வயிற்றையும், நெஞ்சையும் ஏன் உண்டாக்கினாய்? உனக்குப் படைப்புத் தொழில் தேர்ச்சியிருந்தால் ஏழைகளை வெறும் நடமாடும் பொம்மைகளாக அல்லவா சிருஷ்டித்து முதலாளிகளுக்கு வேலை செய்யும் இயந்திரங்களாக ஆக்கியிருக்க வேண்டும்?

காட்டில் திரியும் மிருகங்களுக்குக் கூடச் சந்தோஷமுண்டே ஜோடிப் புறாக்கள்-ஓடி விளையாடும் மான்கள்-பாடிப்பறக்கும் குயில்கள்-அவைகளை விடவா ஏழைகள் குறைந்து விட்டார்கள்! நான் என்ன பாவம் செய்தேன்? உன் பக்தியில் குறைச்சலா? உனக்குப் பயந்து நடக்கவில்லையா? ஏன் இந்தச் சோதனை?”

அந்த மாஜி மனிதனின் அழுத்தமா கேள்விகளுக்குப் பதில்சொல்ல எந்த ஆண்டவனும் தயாராயில்லை. அவன் சோகக் குமுறலை காந்தாவின் உள்ளமும் ஒப்பாரியாக்கி விம்மிக் கொண்டிருந்தது. அவன் கண்களில் நீர் தேங்கி வழிந்து, கன்னத்தின் சூட்டில் காய்ந்துவிட்டது.

சின்னச்சாமியின் தொண்டையில் ஒன்றுமே அடைக்கவில்லை; ஆனாலும் லேசாக கனைத்துக் கொண்டான்.

“எம்மாடி!” காந்தாவும் தூக்க அசதியில் அலுத்துக் கொண்டது போல இந்த வார்த்தையோடு உடம்பை வளைத்துப் புரண்டுபடுத்தாள்.

ஏதோ ஒரு பயங்கரமான முடிவால், அவன் முகத்தில் அசடு வழிவதை மங்கலான விளக்கின் வெளிச்சம்