பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

சோலை சுந்தரபெருமாள்


இனிய நினைவுகளால் ஒரு புதிய மலர்ச்சி அவன் முகத்தில் அவிழ்ந்தது. என்றோ ஒருநாள் அவளால் பாடப்பட்ட ‘பித்துப்பிடித்து’ ஏன் அலைகிறாய் பேதை நெஞ்சமே என்ற அந்த வரியை நினைக்கும் போதெல்லாம் அவன் அடிமனம் அந்தப் பாட்டைப் பாடியவளுக்காகப் பித்துப்பிடித்து அலைய ஆரம்பித்தது. நினைக்க நினைக்க இனிப்பூட்டும். அந்த நயம் பொருந்திய பாடலை நாதஸ்வரத்தில் பாட நினைத்து மீண்டும் அக்கருவியைக் கையில் எடுத்தான்.

உள்ளே இருந்து வெளிவந்த வடிவு-அவன் மனைவி-தன் கணவனை வேண்டா வெறுப்போடு ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அடுக்களைக்குள் சென்றாள். எதற்காகவோ அவனைக் கடிந்து கொள்வதுபோல் அப்பார்வை இருந்தது. எத்தனையோ பேருடைய போற்றுதல்கட்கும், பாராட்டுதல்கட்கும் இலக்காக இருக்கும் அவனது கலையே அந்த நேரத்தில் அவளுக்கு அருவருப்பூட்டிற்று. தன் கணவனை நினைத்தபோது அலங்காரத்தையும் சேர்த்தே நினைத்தாள். உடன் நிகழ்ச்சியாக எழுந்த அந்த நினைவு அவள் உள்ளத்தில் கனிந்து கொண்டிருந்த தாபத்தை மேலும் அதிகமாக்கிற்று.

‘அலங்காரம் அலங்காரம்... அந்த ஆட்டக்காரியின் கூத்துக்கு இவர் வாசிக்கிறாராம். ஊரும் உலகமும் இவரைப் பத்தி பேசிக்கிறது இன்னமுமா இவர் காதிலே விழலே. அந்தக் கூத்தி இவருக்கு நல்லாத்தான் சொக்குப்பொடி போட்டிருக்கா... இதையெல்லாம் அனுபவிக்கணும்னா ஆண்டவன் என் தலையிலே எழுதி வச்சிருக்கான்.’

அடுப்பை முட்டி உலை ஏற்றிய வடிவாம்பாளின் உள்ளம் அந்த அடுப்பைப் போலவே புகைந்துகொண்டிருந்தது. தனி உடமையான தாம்பத்ய வாழ்க்கையை இன்னொரு பெண்ணுக்கும் பகிர்ந்து அளிக்க எந்தப் பெண்தான் ஒருப்படுவாள்!

முத்துத் தாண்டவன் ஒத்திகையை முடித்துவிட்டு ‘வடிவு...வடிவு...” என்று அன்பாய் அழைத்தான். கணவனின் குரலைக்கேட்ட அவள் தன் ஆத்திரம் அனைத்தையும் உள்ளுர அடக்கிக்கொண்டு வெளியே வந்தாள். தெருப்பக்கத்தில் விளையாடிவிட்டுத் தன்னை நோக்கி ஓடிவந்த சிறுவன் செல்வத்தை வாரி அணைத்தவாறு கணவனைப் பார்த்தாள். ‘ஏன் அழைத்தீர்களாம்?’ என்று வினவுவதுபோல் அவள் விழிகள் பிறழ்ந்தன.

“சரியா பத்துமணிக்கு சாமி புறப்பாடு ஆயிடும். நாலு வீதியும் சுத்திவந்து வசந்தமண்டபம் போறதுக்கு மணி ரெண்டு ஆனாலும் ஆகும். நீ பத்து மணிக்கே வந்த அலங்காரத்தின் சதுரையும் பாத்திட்டு சாமி தரிசனம் பண்ணிட்டு வீட்டுக்குத்