பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

258

சோலை சுந்தரபெருமாள்


விட்டது. தீபாவளி பட்டாசு வெளிச்சம் துணிச்சலைத் தந்தது. டவுனுக்குச் சிக்கிரமாகவே தீபாவளியும் வந்துவிட்டது. வானத்தில் ராக்கெட் பூக்கள் சிதறின. சிறிது நேரம் முருகேசன் வேடிக்கைப் பார்த்தான். அத்தான் கொடுத்த பணத்தில் அவன் வாங்கிய பட்டாசுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். ‘வீட்டுக்குப் போவதற்குள் தங்கச்சி தூங்கிடக் கூடாது.தூங்கினாலும் எழுப்பி வெடிக்கனும் மனசுக்குள் யோசனையில் நின்றான்.

“சார். சார். மன்னார்குடி ஒண்ணு”

பஸ் வந்து நிற்பதற்குள் கண்டக்டரை நோக்கிப் போட்ட கூப்பாடுகளில் முருகேசனும் கலந்தான்.

“வேதாரண்யம் இருக்கா?”

“நாலு குடுங்க” பனத்தை வாங்கிக் கொண்டு டிக்கெட்டை நீட்டினார் கண்டக்டர். வெகு சிரமத்தோடு டிக்கெட் வாங்கியவர் வெளியேறினார்.

இது வேதாரண்யம் பஸ். வேராரண்யம், திருத்துறைப்பூண்டி முடிந்து தான் மன்னார்குடி மன்னார்குடி போகிறவர்களும் வேதாரண்யத்திற்கு டிக்கெட் கேட்பார்கள். முருகேசனுக்கு வியர்த்தது. கையால் முகத்தைத் துடைத்துக் கொண்டான்.

‘பட்டாக வாங்கலேன்னா வேதாரண்யத்துக்கே டிக்கெட் கேக்கலாம். கையில் அவ்வளவு காசு இல்லை. இப்பே என்ன பண்றது?’ முருகேசன் தனக்குத்தானே பேசிக் கொண்டான்.

“அடுத்த பஸ் எப்பங்க?”

“டிக்கெட் வாங்காதவங்க பஸ்ல ஏறாதீங்க” எச்சரித்துக் கொண்டிருந்த காக்கிச் சட்டையைக் கேட்டான்.

“இதுதான் கடைசி பஸ்”

சொல்லிக் கொண்டே காதில் இருந்த பீடியை கையில் எடுத்துக் கொண்டு பற்ற வைக்க நெருப்பு தேடிப் போனார். பஸ்ஸும் போனது.

சிறுவர்களுடன் பெரியவர்களும் பஸ் ஸ்டாண்டில் அல்லாடினர். அடம் பிடித்துப் பட்டாசு வாங்க வந்த சிறுவர்கள் ஊருக்குப் போக முடியாத கவலையில் மெளனத்தில் அலைந்தார்கள். பட்டாசு வெடிக்க ஊதுவத்தி, பலூன், பொம்மை, கிலுகிலுப்பை கூவிக் கொண்டு கூட்டத்தில் சிலர் புகுந்துவிற்றனர். இந்த நெருக்கடியில் அதிஷ்டத்தைச் சுமந்த சிறுவர்கள் லாட்டரி சீட்டை வாங்கச் சொல்லி, கெஞ்சிக் கொண்டிருந்தார்கள். முருகேசன் வருத்தமாய் இருந்தான்.

“தீபாவளிக்கென்று ஸ்பெஷல் பஸ் விடுவாங்க”

கூட்டத்தில் யாரோ நம்பிக்கையை விதைத்தார்கள். கூட்டம் நின்றது. வெடிசத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது.