பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

சோலை சுந்தரபெருமாள்


போய்விடலாம். முழங்கால் தண்ணீரில் நாள் முழுக்க நின்று தூண்டில் போட்டு மீன் பிடிக்கும் சுகத்தை நினைத்துக் கொண்டே நடந்தான்.

“டேய்... டேய்... வராத நில்லு”

இவன் வயதுப் பையன்கள் சாலையை மறித்து நின்றார்கள். முருகேசன் நின்று பார்த்தான். அணுகுண்டு வெடிக்கவில்லை. ஒதுங்கி நடந்தான். ரொம்ப தூரம் வந்த பிறகும் அவன் திரும்பிப் பார்த்தான். அது வெடிக்கவில்லை. அவர்கள் நெருங்கவுமில்லை. வெடி வெடிக்க வேறு இடம் மாறிச் சென்று கொண்டிருந்தனர்.

நிலம் வெளுத்தது. புஸ் வாணம் கொளுத்தியதாய் கீழ்வானத்தில் பிரகாசம் வந்தது. அவன் ஊரும் வந்தது. அவனுடைய கூட்டாளிகள் எல்லாம் சாலையில் வெடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கண்களுக்குப் படாமல் சுற்றி வயல்காட்டு வழியாக அவன் வீட்டின் கொல்லைப்புறம் வந்தான். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தங்கச்சிக்கு அம்மா குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். வேலிப்படலைத் திறந்து கொண்டு இவன் நுழைய சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தது அம்மா தான்.

“முருகேசு... இந்த நேரத்துல... ஏதுடா பஸ்...”

அம்மா ஓடிவந்து அவனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கவலையுடன் கேட்டாள். அப்பாவும் சத்தம் கேட்டு வந்தார்.

“அக்கா நல்லா இருக்கா...? அத்தான் கோவிச்சுக்கலியே. நீ என்ன சொன்ன?”

அடுக்கடுக்காய் வந்த கேள்விகளில் அப்பாவின் மன உளைச்சல் தெரிந்தது. அவருக்குத் தன் மீதே வெறுப்பு. தலைத் தீபாவளிக்கே இப்படி நேர்ந்துவிட்டதில் சங்கடம்.

“அம்மா...அம்மா...”

கண்ணில் விழுந்த சியக்காய்துள்ளைக் கசக்கிக் கொண்டே எரிச்சலில் தங்கச்சி அழுதது. அம்மா தலை துவட்டிவிட்டதும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு ஈரத்தோடு ஓடி வந்து அவனிடமிருந்த பட்டாசுப் பையைப் பிடுங்கிக் கொண்டது.

“நான் அப்பா சொன்னதைத் தான் சொன்னேன்”

“என்ன சொன்னேன்னு விவரமா சொல்லுடா”

சீக்கிரம் வெடி வெடிக்கப் போக நினைத்த முருகேசனை அப்பா விடவில்லை. அவன் ஏதாவது மாற்றாகச் சொல்லி இருப்பானோ! புள்ளையை விட்டே சொல்ல வேண்டியதாச்சே, அப்பா கவலைப்பட்டார். அம்மா அவன் தலையைக் கோதினாள்.

வெடிச்சத்தத்தில் மிரண்ட பறவைகள், திடீரென்று மக்களுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைத்து ஊரை விட்டு கத்திக் கொண்டே வெளியேறின. முருகேசனுக்கு அப்பாவைப் பார்க்கப் பாவமாக இருந்தது.