பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

268

சோலை சுந்தரபெருமாள்


கொண்டுதானே இங்கு வந்தாள். இருபுறமும் மணல் மேடுகள், மணல் மேடுகளில் அவனை நோக்கியே பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய பெரிய புளியமரங்கள். திரும்பிப் பார்த்தால் தூரத்தில் புள்ளியாகத் தெரியும் அஞ்சினி கிராமம். புள்ளிப் புள்ளியாகத் தெரியும் நெட்லிங்க மரங்கள். இரவில் கோடிக்கணக்கில் கோடி கோடியாய் ஒளி கொட்டும் மின்மினிப் பூச்சிகள். அவளைத் தவிர அந்தக் காவிரித் தீவில் வேறு யாருமே இல்லையோ என்று எண்ண வைக்கும். அவள் காலையிலிருந்து என்னதான் செய்கிறாள்? என்னதான் செய்ய வேண்டும்? அந்த சின்னஞ்சிறு வீடு சுற்றிலும் பசுமையாக கிளுவை வேலி, வேலியில் படர்ந்து கிடக்கும் தூதுவளைக் கொடிகள். அவைகளைப் பின்னிக் கொண்டு கோவைக் கொடிகள், ஒரு பசுமையான சுவரையே உருவாக்கியிருந்த கொடி ரோஜா என்று அவளது உழைப்பை வாங்கிக் கொண்டு சுற்றிலும் தோட்டம் மண்டிக் கிடந்தது.

கொடிகள் காய்களை தொங்கவிட்டிருந்தன. மாமரங்களில் மாங்கனிகள் மரத்திலேயே பழுத்து கனத்தன. வேர்ப் பலா சட்டி சட்டியாய் மலைமலையாய் காய்த்துக் கிடந்தன. அந்த வீட்டிற்கு அவளே வெள்ளையடித்தாள். திருவையாற்றுச் சந்தையில் வாங்கி வந்த இதமான டிஸ்ட்ம்பர் கலர்களில் அவளே அந்த வீட்டுச் சுவர்களுக்கு வண்ணம் தீட்டினாள். ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஜன்னல்களுக்கெல்லாம் அவளே வர்ணங்கள் பூசினாள். துணைக்கு கூட அவள் யாரையும் கூப்பிட்டுக் கொள்ளவில்லை...

ஒருமுறை அவன் வந்தான். “இன்னும் எவ்வளவு நாள் தான் இஞ்சயே இருக்கணும்” என்று கேட்டாள் லோச்சனா. அவன் ஒன்றுமே சொல்லாமல் சிரித்தான். பிறகு “உன்னப் பாத்தா எல்லாருக்கும் பயமாருக்கு! எல்லாரும் வாண்டாம் வாண்டாங்கிறாங்க! இப்படியே மூன்று வருஷம் ஆகிப்போச்சு. எனக்கு தெரியாது லோச்சனா? நீ வேற பெரிய ஆர்ட்டிஸ்ட் அப்படீன்னு சொல்லிகிட்டு உடம்பெல்லாம் வர்ணத்தெ மாறி மாறிப் பூசிக்கிறெ! உங்கம்மாவே சொல்றா ‘அவளுக்கு குணமாயிட்டதா? இல்லையா?ன்னு எப்படிடா தெரியும்? ஒடம்பு, கை, காலு, மொகம் எல்லாம் தாமரைப் பூவாவும், எலையாவும், காயாவும் இப்படி வரைஞ்சு வச்சுக்குமா ஒரு பொண்ணு!??’ அப்படிங்கிறா. நீ என்னடிான்னா அவா சொல்ற மாதிரி இருக்கவும் மாட்டேங்கிறே? ஒனக்குப் பிடிச்சிருந்தது போயிடுத்துன்னு எல்லாரும் நம்பினோம். அதுக்கு நாஞ் சொல்றபடியாவுது நீ கேட்கணும். இந்தப் படம் வரையிற சனியனை விட்டொழின்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு. அஞ்சினியில குடியானத் தெருவிலருந்து அக்ரஹாரம் வரைக்கும்