பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276

சோலை சுந்தரபெருமாள்


வீடுகளின் வாசல்கள் எட்டு புறமும் திறந்து கிடந்தன. வாசல்களுக்கு கதவுகள் இல்லை. கவர்களில்லை!! ஆலய வாசல்கள் போல் சிற்பச் சாதுரியாய் அவள் கையாலயே கட்டிய வாசல்களாய் இருந்தன. வாசலுக்கு நேர் எதிரே அவளும் அந்தப் பக்கத்து பறையர்களும், பள்ளர்களும் சேர்ந்து வெட்டிய குளம் ஒன்று நீல நிற தடாகமாய் காட்சி அளித்தது. இதெல்லாம் யாருக்குப் பிடிக்கும்? யாருக்குப் பிடிக்க வேண்டும்?!! ஆனால், அந்தப் பக்கத்து மீன் பிடிக்கும் வலையர்களுக்கும், ஆடு வளர்க்கும் தோரிகளுக்கும் லோச்சனாவை ரொம்பப் பிடித்தது. அவள் தரும் காரமான டீயும், உப்புச்சுவை மிகுந்த எலும்பிச்சபழ சாறும் பல காய்கறிகள், கீரைகள் மிதக்கும் சாம்பாரும், சோறும் அவர்கள் எங்கும் ருசித்ததேயில்லை. அந்தத் தொழு நோயாளிப் பெண்ணின், நோய் அவர்களுக்குத் “தெரியவேயில்லை”. ஏகாலிப் பெண்கள் கொண்டு வந்து கொடுக்கும் ஒவ்வொரு வெள்ளைத் துணியிலும் அவள் மெழுகால் வரைந்து கொடுத்த, Batic (பேத்திக்) டிசைன்கள் அபாரமாய் இருந்தன.

அந்த வீட்டுச் சுவர்கள் எங்கும் அவள் வரைந்த காளியின் உருவங்கள். சாந்தமாகிச் சிரித்தன. ஒரு தடவை அப்பா வந்தார். “என்னடீது பெண்ணே?!! இந்த நல்ல எடத்தெக் குட்டிச்சுவர் ஆக்கி வச்சிருக்கே? சப்பாத்திக்கள்ளி குண்டு கள்ளி, திருகுகள்ளி, குச்சிக்கள்ளின்னு ஊருல இருக்குற எல்லா முள்ளுச் செடியும் கொண்டு வந்து நட்டு வச்சு, என்ன எழவு இதெல்லாம்?. ராகவன் ஒன்றுமே சொல்றது இல்லையா? ஒன் இஷ்டத்துக்கு விட்றான் பார்! He is Great அவனை மாதிரி ஒரு புருஷன் கிடைச்சதுக்கு நீ புண்ணியம் செஞ்சிருக்கணும். ஒனக்கு ஒண்னும் மனக்குறையில்லாம வச்சிருக்கானே? இத்தனை வியாதியிலும்..” என்றார்!

“யாருக்குப்பா வியாதி? ராணி தலை நிமிர்ந்து சீறினாள்.

“ஒனக்குத்தான் - வேற யாருக்கு?”

“எனக்கு வியாதியில்ல, உங்களுக்கும், உங்க மருமகனுக்கும் தான் வியாதி, எனக்கு இரண்டு வருடத்திற்கு முந்தியே சொஸ்த்தமாயிடுத்து.”

“இந்தா ரோஸ் பேட்ச் (patch) செல்லாம். அப்படியே தானே இருக்கு, குணமாயிடுத்துங்கிறயே?”

“நான் சொல்லலைப்பா? டாக்டர்ஸ் சொல்றா! எனக்கெல்லாம் சரியாப் போயிடுத்தாம். இனிமே நான் எல்லாரு மாதிரிதான் அப்படிங்கிறா”

“இதையேதான் எல்லாருஞ் சொல்றா! ஆனா யாரு நம்பறா!?”

“ராகவன் கூடச் சொல்றானே? ஆனா ஓம் மூஞ்சிலே இன்னும் நீ எலை, பூ, கொடியெல்லாம் வரைஞ்சுகிறியே?