பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

277


அதெல்லாம் எதுக்காம்? மறைக்கிறதுக்கா?! மூடுறதுக்கா?”

“நான் எதையும் மூடலைப்பா, நீங்களும் ஒங்க மருமகனும் தான் மறைக்கிறேள். பொதுவா உலகமே பூராவும் மறைச்சுக்கிறது மூடிக்கிறது, அப்படிங்கிறதுதான் உண்மை யாருக்கு. எல்லாப் பொண்ணும், எல்லா மாடும், எல்லா மிருகங்களும், ஒங்களுக்கு ஒண்ணாயிருக்கணும், ஒழுங்கா தீனி தின்னனும், குட்டி போடணும், வேற மாதிரி இருக்கக்கூடாது, இல்லையா? எனக்கு நோய்குணமாயிட்டாக்கூட நீங்க ஒத்துக்கமாட்டேள். எட்டு வருசமா வேற ஒருத்தியா இருந்தா - இவ இருந்த எடத்துல - இப்போ புல்லு, மொளச்சிருக்கும். ஒங்களுக்கெல்லாம் ஒரு குடும்பம், வீடு, வாசல், உறவு எல்லாம் நீங்க விரும்புற மாதிரி இருக்கு. ஆனா எட்டு வருசமா நான் தனியா இல்ல. எனக்குன்னு ஒரு முழு உலகத்தையே உருவாக்கிகிட்டதால நான் இடிஞ்சு போயிடல. என்னுடைய வேலையெல்லாம் இன்னும் ஓர் முழு ஆயிசுக்குப் பாக்கியிருக்கு. நான் குமஞ்சு போய் மூலையில உட்கார்ந்திருந்தா என்னா ஆகியிருந்திருக்கும்.”

“என்னமோ நீதான் சொல்றே? மனுஷா இல்லாம யாரையும் தண்டாம இப்படி ஒரு வாழ்க்கையா? இதைவிட டாக்டர்கிட்ட நர்ஸிங்ஹோம்லேயே நீ இருக்கலாம்...”

“ஆமாமா மூலையில போட்டு மூடி வைக்கிறதுக்கு நல்ல இடம் அதுதான்.”

“ஆமா!? லோச்சனம் நீ ஏண்டி இப்படி இருக்கே? எல்லாரு மாதிரியும் இருக்கப்படாதோ?...”

“இருக்கக்கூடாதுன்னு தானேப்பா இஞ்சப் போட்டு வச்சருக்கேள்!”

வானம் இருண்டு வந்தது. மலை மலையாக மேகங்கள் அடர்ந்து வந்தன. அவள் ராகவனிடம் போவது அவளுக்கு மறந்து வந்தது. அவன் வரும்போதெல்லாம் தொடமாட்டானா? என்று மனம் தவிக்கும். ராணியா வாய்தெறந்து தொடு என்று கேட்பாள்? அவனால் முடியாது. எப்போதாவது அவன் கைகளைப் பிடித்து வைத்துலோச்சனத்தின் சின்ன, ஆனால் தடித்த உதடுகளை கவ்வ மாட்டானா? என்றிருக்கும். ஆனால் ராகவன் நிச்சலனமாய், கருணை வடிவாய் அவளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பான். லோச்சனத்தைப் பார்க்க வரும் அம்மா பொருமிப் பொருமி அழுவா. தங்கைகள் தூரத்திலிருந்து பரிதாபப் பார்வைப் பார்ப்பார்கள். மச்சினர்கள், மரியாதையோடு பழங்களைக் கொண்டு வந்து தருவார்கள். ஆஹா! உலகம்தான் எத்தனை ஒழுக்கமாகவும், ஞாயமாகவும் நடந்து கொள்கிறது. அடடா! எங்குப் பார்த்தாலும் கருணை வடிவங்கள் எட்டு வருடத்து தனிமையையும், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய்