பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

சோலை சுந்தரபெருமாள்


தான் குறிப்பிட்டு சொல்லுவாரு. ரொம்ப நாளு வரைக்கும் அவுருபேரு 'மொட்டதானான்னு' ஒரு சந்தேகம் தங்கசாமிக்கு நெஞ்சில் இருந்திச்சி. கேட்டுதான் பாத்துருவேமேன்னு மொட்ட வாத்தியாருகிட்டயே போயி கேட்டாரு. துணிஞ்சி கேட்டுப்புட்டாரே ஒளிய உள்ளுக்குள்ள நடுக்கம்தான். அவருக்கு வாத்தியாரு தப்பா எடுத்துக்கு வாரோன்னு தான். கூனிக் குறுவிப்போயி நின்னுக்கிட்டிருந்தாரு. நடுக்கமா போயிருச்சி. 'என்னா துணிச்சலா கேட்டுப்புட்டம்' அப்படிங்குற கவலதான். மொட்ட, வாத்தியாரு கேட்டதுக்கு பதிலு சொல்லாட்டி கூட பரவால்ல தான். அதத் தெரிஞ்சிகிட்டுதான் என்னாப் பண்ணப் போறாம்னு அப்றமா தான புத்தில படுது. மொட்ட வாத்தியாரு இதுக்காவ ஒண்ணும் கோச்சுக்கலை. ஆனா பேசாம குந்திருக்காரே... டக்குன்னு செவ்வுல நாலு குடுத்து நாலு வார்த்தை பேசிபுட்டா கூட தேவலாம் தான். அவுரு மௌனம்தான இவுர சில்லு சில்லா நொறுக்கிட்டிருக்கு.

மொட்ட வாத்தியாரு மேல தங்கசாமிக்கு ரொம்ப இஷ்டம். நிமுசம் வுடாம அவுரு 'ஆ....ஆ...'ன்னு மூச்சுவுடாம இளுத்து பாடுறதும், வெட்டிப் பாடுறதும், சுளுச்சி பாடுறதும், ஜாலக்கு பண்றதும் காதுக்குள்ள தேவாமிர்தமா கேட்டுகிட்டேருக்கே. எம்புட்டு மரியாதை வச்சிருக்காரு தங்கசாமி அவரு மேல. நிமுச நிமுசமா மொட்ட வாத்தியாரப் பத்தியேதான் நெனச்சிகிட்டிருப்பாரு இவுரு. குரு பக்தில அப்டி ஒரு பக்தி. அவுரு சொல்லிகுடுக்குற பாட்டும், வசனமும், நடிப்பும் நெஞ்சுல டேப்பா பதிஞ்சி போயிருச்சி.. தங்கசாமி தா வூட்டுக்குள்ள மாட்டி வச்சிருக்குற அநேக சாமி படத்தோட மொட்ட வாத்தியாரு படத்தத்தான் முக்கியப்படுத்தி மாட்டி வச்சிருக்காரு. நெத்தில் சந்தன பொட்டு வச்சி பூ போட்டு லைட்டு குடுத்து கூட வச்சிருக்காருன்னா பாத்துக்கங்களேன். அவுரு குருபத்திய மதிச்சதால தான இன்னியவரைக்கும் நாடாவத்திலே கெடந்து. ஒலண்டு இந்தால ஓஞ்சிப் போயி குந்தப்போறதும்... தங்கசாமி மட்டும் பாட்டுல கெட்டிக்காரரு இல்லியா என்னா? ரேடியோ பெட்டி, மைக்கு கிய்க்கு இல்லாம ஒரு பர்லாங் தூரத்துக்கு கேக்கும்படியா பாடுவார் ஆசாமி... ஆ...ஆ...ஆன்னு இளுத்து ஆ...ன்னு வெட்டிப் பாடயில பெட்டிக்காரனுக்கும், சட்டிக்காரனுக்கும் டவுசரு கிளிஞ்சிப் போயிராது... என்னா கொரலுடா. சாமி அது தவுள டகடகடகடகன்னு உருட்ற மாறில்லா ராகத்தை எளச்சிப்புடுவாரு எளச்சி... தவள கக்கரக்கா கக்கரக் காக்குற மாறில்லா கொரலு உருண்டு உருண்டு வரும். பாட்ட எம்புட்டுக்கு ருசி படுத்த முடியுமோ அப்புட்டுக்குல்ல ருசிபடுத்திபுடுவாரு. இவுரு எளச்சிப் பாடுற ராகத்தக் கேட்டு எம்புட்டு எடத்துல எம்புட்டு