பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

325


அவளையறியாமலேயே புடவையை வரிந்து கட்டிக் கொண்டு வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டாள்.

“நீ சொல்றது நிஜம்தான் மாமா. ஊரு நல்லா இருந்தாத்தான் நாமலும் நல்லாயிருக்கலாம். அதுக்காக இவ்ளோ நீளமான வாய்க்காலை நீயும், நானும் மட்டுமே சுத்தம் பண்ணிட முடியுமா...”

ஆற்றாமையுடன் கேட்டவளை திரும்பிப் பார்க்காமலே பதில் தந்தான்.

“முதல்லே நம்மாலே முடிஞ்சதை நாம செய்வோம்....”

அதற்குமேல் என்ன சொல்வது என்று தெரியாமல் அவன் அறுத்துப்போட்ட செடிகளை அள்ளி கரையில் கொண்டுபோய் போடத் தொடங்கினாள்.

அவர்களைப் பார்த்தபடியே சற்றுத்தள்ளி எப்போதும் போல் வலை போட்டுக் கொண்டிருந்த மாரிமுத்துவுக்கு என்ன தோன்றியதோ என்னவே, .. வலையை மடக்கி கரையில போட்டான்.

“நாசமாப் போற செடிங்க, தரையிலேயும் மண்டுது, தண்ணியிலேயும் மண்டுது. .. எங்கிருந்து வந்துச்சோ எங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்க. ..” என்று முணுமுணுத்தபடி வேட்டியை அவிழ்த்து முண்டாக கட்டியபடி வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டான், மருதனுக்கு ஜோடியாக.

நேற்று மருதனிடம் சொல்லிவிட்டதாலோ என்னவோ வடிவாய்க்கால் ரோட்டில் வில் வண்டியின் புறம் உட்கார்ந்தபடி மகள் வீட்டிற்கு போய்க்கொண்டிருந்த கிழவர் காளியப்பனின் பார்வை யதேச்சையாக வாய்க்காலுக்குள் சென்றபோது திடுக்கிட்டுப் போனார்.

மருதன்... அல்லி.., மாரி... மூவரும் மும்முரமாய் செடிகளை அறுத்தபடியிருந்தனர்.

அனிச்சையாய் வண்டியிலிருந்து குதித்து விட்டார் பெரியவர். நொடி நேர யோசனைக்குப் பிறகு “வண்டியை வீட்டுக்கு திருப்பிப் போடா... எனக்கு இங்கே கொஞ்சம் வேலையிருக்கு...”என்றபடி, வேட்டி சட்டையை கரையில் அவிழ்த்து போட்டுவிட்டு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு அவரும் வாய்க்காலுக்குள் இறங்கிவிட்டார்.

இந்தச் செய்தி வண்டிக்காரன் மூலம் ஊருக்குள் பரவியது. டீக்கடை, மாரியம்மன் கோவிலடி என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் காதில் விழுந்தன. உறுத்தல் தாங்காமல் ஊர்க்காரர்கள் ஒவ்வொருத்தராய்த் தயங்கித் தயங்கி முன்னும், பின்னுமாய் வடிவாய்க்கால் நோக்கி நடக்கத் தொடங்கினர்.