பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
விபத்து


றுபடியும் அதைப் போல் ஒன்று நடந்திருக்க வேண்டும். இத்தனை ஜனம் ஒரே இடத்தில் திரண்டிருப்பதற்கு வேறு காரணமெதுவும் தோன்றவில்லை. சாலையோரத்தில் சைக்கிளை நிறுத்தி விட்டு சற்றுநேரம் கும்பலையே பார்த்துக் கொண்டிருந்தான். வெகுவான எண்ணச் சிடுக்குகளிலிருந்து ஓய்ந்து இளைப்பாறிக் கொண்டிருந்தது மனது. அந்த திருப்தியானது சகஜபாவனையில் உறங்கும் மூர்க்க உணர்வுகளுக்கிடையில் எந்த நிமிடத்திலும் நிகழ இருக்கும் நுட்பத் தாக்குதல்களுக்கும் - அவற்றில் முதிர்வில் அவனிடம் ஏற்படுத்தப் போகும் புறக் கொந்தளிப்புகளுக்கும் ஆயத்தம் பூண்டிருந்தது.

முன்னம் வாய்ந்த அனுபவம் வேறுவிதம். அது லாரியேறிய பெண். சதை மசிந்து வெளெரென்று துருத்திய நெஞ்செலும்புகள். ரத்தத்தில் ஊறிக் கொண்டிருந்த இளமையின் கோரக்கலவை. ரத்தம் புறக்கணித்துத் தெளிவாயிருந்த ஒரு பக்க முகத்தில் நவீன மோஸ்தர் காதுத் தொங்கள் கன்னத்தில் ஸ்னேகமாய் பதிந்து வெயிலுக்கு ஒளிர்ந்தது. இறந்த பின்னும் விட்டுவிடாத பையிலிருந்து விலகிக் கிடந்த வண்ணக்குடையின் கைப்பிடி மண்ணில் ஓடிந்திருந்தது. ஒரு போலீஸ்காரன் சாவதானமாக மூக்கைச் சிந்தியபடி “நகரு நகரு...எஸ்.ஐ. வரப்போறாரு" என்று லட்டியைத் தரையில் தட்டி மிடுக்குக் காட்டும் வரையில் வண்டலாய்த் தேங்கி நின்று யதார்த்தத்தின் உஷ்ணத்தால் ஆவியாகிப் போய் இப்போது இனம் புரியாத மணத்தை மட்டுமே தக்க வைத்துக் கொண்டிருக்கிற கடந்த காலத்தில் ஒரு விசாலமான பகுதியில்; அல்லது ஏதாவது ஒரு பருவத்தின் சொற்ப தினங்களில்... அல்லது உயர்வான அர்த்தத்துடன் எதிர்வந்து மோதி ஸ்தம்பிக்க வைத்து திரும்பிப் பார்ப்பதற்குள். தன் எல்லா அடையாளங்களையும் சுருட்டிக் கொண்டு மறைந்து விடுகிற அனேக உன்னத நிமிடங்களொன்றில் - அவனது வார்த்தைகளோ, உடலோ,