பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

57


உருவாயிற்று. ஊரிலே தொழிலாளிகளின் அந்தக் காலத்து வழக்கம் இப்போதும் அப்படியேதான் இருக்கிறதோ, அல்லது மாறிவிட்டதோ? ரத்தினசாமிக்குத் தெரியாது. இன்றுதான் அவன் இங்கே வந்தான். எல்லாருக்கும் அந்நியனாக இருக்கிறான். முன்னே ஊர் முழுக்க எல்லாருக்கும் அவனைத் தெரியும்.

ஊருக்கே செல்லப்பிள்ளை என்றுகூட அவனைச் சொல்லலாம். அப்படித்தான் எல்லாரும் ‘ரத்தினு’வைக் கொண்டாடினார்கள். கடைசியிலே, ‘விழுந்த தேவதூனை’ப் போல அவன் ஊரைவிட்டு வெளியேறினான். எங்கேயாவது மூலை முடுக்கிலே அவனுக்குப் பழகிய பழைய முகங்கள் கிழடுதட்டிக் கிடக்குமோ என்னவோ! இனித்தான் தட்டுப்படவேண்டும்.

தச்சு, கொல்லு, பொன்வேலை இவையெல்லாம் செய்யும் ஆசாரிகளுக்கும் சரி, சலவை, ஷவரம் இவை செய்யும் தொழிலாளிகளுக்கும் சரி, சாதாரண வேலைகளுக்கு ஊரிலே யாரும் கூலி கொடுக்கும் வழக்கமில்லை. அறுவடைக் காலத்திலே அவர்கள் நிறைய நிறைய வர்த்தனை பெறுவார்கள். திருவிழாக்கள், ‘கலியாணம் கார்த்தி’, பண்டிகைகள் முதலிய விசேஷ நாட்களில் அவர்களுக்குப் பல வருமானங்கள் உண்டு. ஏர்க்காலுக்கு ஓட்டுப்போட வேண்டும், எரு வண்டிச் சக்கரத்துக்குப் பட்டம் மாட்ட வேண்டும் என்ற மாதிரி சகஜமான வேலைகளையெல்லாம் செய்வது ஆசாரிமார் கடமை. ஆனால், இதற்காக ‘ஒரு வண்டியே செய்’ என்றால் அதற்குக் கூலி கொடுத்தாக வேண்டும். வேலைப்பட்டறையிலும் சரிதான், அறுவடைக் களத்திலும் சரிதான், சாந்தப்பன் பெரிய சோம்பேறி. வேலைக்கு மழுப்புவான். வர்த்தனை கேட்கப் போகமாட்டான்; அவனுடைய மனைவி மக்கள் தான். ஏதோ யாசகம் கேட்பது போலக் கொஞ்சம் வர்த்தனையை வாங்கிவர வேண்டும். ஊர்ச் சமுதாய நிலத்தில் அவன் குடும்பத்துக்கும் சிறிது பங்கு உண்டு. அதன் ‘வெள்ளாமை’யைக் கொண்டு தான் என்னவோ கொஞ்சம் கஞ்சி காய்ச்சிக் குடித்து வந்தது அந்தக் குடும்பம்.

சாந்தப்பனுக்கும், குருமூர்த்திக்கும் ஒரு சமயம். ஒரு ‘சவால்’ வந்தது. ரகசியம் என்னவென்றால், சாந்தப்பனை வேலை செய்யும்படி தூண்டச் சவால் தான் சரியான யுக்தி என்பது குருமூர்த்திக்குத் தெரியும். ஊரிலே கௌரவமான ‘பெரிய’ மிராசுதார் குருமூர்த்தி. ‘பெரிய’ என்றால் பல வேலிக் குடித்தனக்காரர் அல்ல. கொங்கணச்சேரி கிராமத்தில் அவர்தான் பெரிய மிராசுதார். இரண்டரை வேலி நிலம் அவருக்கு உண்டு. ஒரு வேலி நிலத்துக்கு மேல் உடையவர் மற்ற யாருமே அங்கில்லை. எல்லாருக்குமே குருமூர்த்தியிடம் நல்ல மதிப்பும், மரியாதையும் உண்டு. அவர் பெரிய மிராசுதார். என்பதால் அல்ல;