பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

சோலை சுந்தரபெருமாள்


அடக்கிக்கொண்டு தளைக் கயிற்றைக் கையிலே பிடித்தானானால், ஓடாத மாடெல்லாம் இறக்கை கட்டிய குதிரைகள் மாதிரி பறக்கும். அன்று இந்தப் பெட்டி வண்டியை அவன் தான் ஓட்டினான். அதுதானே பொல்லாத தீங்காய் முடிந்தது?

குருமூர்த்தி இந்தப் பெட்டி வண்டியில் வெள்ளோட்டத்துக்கென்றே புதிதாக மிக அழகான ஒரு ஜோடி காளைகள் வாங்கினார். அவற்றுக்குக் கொப்பி, சதங்கை, மணிமாலை -முதலிய அணிகளெல்லாம் போட்டுவிட்டார். அந்த மாடுகளுக்கேற்ற சாரதி ரத்தினந்தான். என்னிடம் விதம் விதமாய்ப் பூணும் சாட்டைகளும் கட்டிய தார்க்குச்சிகள் உண்டு. மணிமுடிச்சுச் சாட்டை, சன்ன வார்ச் சாட்டை, பூக்குஞ்சலச் சாட்டை இப்படிப் பல உண்டு அவனிடம். சாட்டையோடு, கறுப்புக் குடை ஒன்றையும். வண்டியோட்டும் சாதனமாகச் சில சமயம் அவன் கையாளுவான். - குடைக்கு மிரளும் மாடுகள் விஷயத்தில் அவனுக்கும் வெகு உற்சாகம். சாட்டையடிக்கும், தார்க்குத்துக்கும் மசியாத மாட்டை, விறுக்கென்று குடையை விரித்து வெறித்தோடச் செய்யும்போது, ஏதோ ‘பாரசூட்டில்’ பறப்பதுபோல அவனுக்கு ஆனந்தம் ஏற்படும். இந்தப் புது மாடுகளுக்குப் பூச்சாட்டை போலவே குடையும் அவசியம் என்று அவன் எடுத்துவந்தான்.

“அடே , ரத்தினம், தார்க்குச்சியால் குத்தி ரத்தக்காயம் செய்துவிடாதே. ஹத்திலே ஓட்டு” என்று தொடக்கத்திலேயே எச்சரித்தார் குருமூர்த்தி.

“அந்தக் கவலை உங்களுக்கு வேண்டியதே இல்லை” என்று உறுதி சொன்னான் ரத்தினம். தாரைச் சுர் என்று குத்தி எடுக்கக்கூடாது; மென்மையாகக் குத்தி ஒரு திருகு திருகி எடுத்தால் பொட்டு ரத்தம் வராது. தவறி வந்தால் சிறிது சாணத்தைத் தடவிவிட்டால் போயிற்று. இது தார்க்குச் சிக்களை பற்றி அவனுடைய சித்தாந்தம்.

ரத்தினம் வண்டியோட்டினான். அழகான பெட்டி வண்டி, அதில் அழகான பெண்களே உட்கார்ந்திருந்தார்கள். குருமூர்த்தி பின் வண்டி ஒன்றில் வந்தார். பெட்டி வண்டியில் முன் பாரம், பின் பாரங்களையெல்லாம் சரி செய்தபோது, சிவகாமி முன்பக்கத்தில் மூக்கணைக்கு அருகே உட்காரவேண்டி வந்தது. பெட்டி படுக்கை இவற்றோடு மற்றும் இரண்டு பெண்கள் அந்த வண்டியிலே இருந்தார்கள். சற்றுப் பருத்திருந்த ஒருத்தி, வண்டியின் நடு மத்தியிலே உட்கார்ந்திருந்தாள். அவள் சிவகாமியின் அத்தங்காள்; கொஞ்சம் வாயாடி; சம வயசுக்காரி.

வண்டியில் இருந்த மூன்று பேருக்குள்ளும் அதிக அழகி சிவகாமிதான். முழுமதிபோல் சற்று வட்டமான முகம், செக்கச் செவேல் என்றிருக்கும் அவள் மேனி, கறுத்த கூந்தல் தானாகச்