பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

63


சுருண்டு சுருண்டு, ஓவியன் எழுதிய லலித ரேகைகள் அடர்ந்து அலை மோதுவது போல் வளைந்து சென்றது. அவளுக்கு ஒன்றும் அப்படி வயசாகி விடவில்லை. இருபத்தேழோ எட்டோதான் இருக்கும். கூந்தலை வாரி வகிடெடுத்துக் கால் வாங்கிப் பின்னித் தொங்கவிட்டு, பூச்செருகிக் கொண்டிருந்தாள். நெற்றியின் நடுவில் புருவங்களின் இடைக்குச் சற்று மேலே பச்சை குத்திய பொட்டு ஒன்று துவங்கியது. அந்தப் பொட்டை மறைக்காமல், அதை ஒட்டினாற்போல் அதற்குக் கீழே ரம்யமான செஞ்சாந்துப் பொட்டு இட்டிருந்தாள். ஜரிகைக் கரைச் சிவப்பு ரவிக்கை, கரும்பட்டுச் சேலை, அதிக நகைகள் இல்லை. கழுத்திலே இரண்டு வடச் சங்கிலி, கையிலே காப்பு, காதிலும், மூக்கிலும் மூளியில்லாமல் சாதாரண நகைகள்.

‘ட்ரு! ட்ரு! ட்ரு! ஹை!’ என்று பூச்சாட்டையை ஓங்கி இடது மாட்டின் வாலை முடுக்கினான் ரத்தினம். கொஞ்சம் துடியான மாட்டைத்தானே பெரும்பாலும் இடத்தில் கட்டுவார்கள்? இது என்னவோ சற்று மந்தமாக இருந்ததுபோல் ஆரம்பத்தில் தோன்றியது. இடம் வலம் மாற்றிப் பார்க்கலாமா என்று எண்ணினான் ரத்தினம். இல்லை; கொஞ்ச தூரம் போனதும் சரியாகிவிட்டது. புது ஆளைக்கண்டு வெறிப்புத் தணியச் சிறிதுநேரம் ஆயிற்றுப் போலிருக்கிறது.

வண்டிகள் ஓடின. பெட்டி வண்டி தான் எல்லாவற்றுக்கும் முன்னே சென்றது. மற்ற வண்டிகளுக்காகச் சிறிது சிறிது தளைக் கயிற்றை இழுத்துப் பிடித்து மெதுவாகவே ரத்தினம் அதை ஓட்டவேண்டியதாயிற்று. வண்டியோ வில்வண்டி; பாதையோ சற்று ஈரம் பாய்ந்தது. மாடுகளுக்குத்தான் கொஞ்சம் கஷ்டமாயிருந்திருக்கும். உள்ளே உட்கார்ந்து சவாரி செய்தவர்களுக்கு மிகவும் சொகுசாகவே இருந்தது. அந்தப் பெண்கள் உற்சாகமாகத் தொண தொண என்று பேசிக்கொண்டே இருந்தார்கள். ரத்தினத்தின் காதிலும் அது விழுந்தது.

பருத்த அத்தங்காள், சிவகாமியை ஓயாமல் ஏதாவது கேலி செய்து கொண்டே வந்தாள். சிவகாமிக்கு ஒரே பெண் இல்லையா? இதனால் அவள் பெரிய ‘சோடை’யாம். தனி மரம் தோப்பாகாதாம்; ஒரு குழந்தை பிள்ளைப்பேறு அல்லவாம். குறைந்தபட்சம் ஒரு பெண்ணும், ஓர் ஆணுமாக இரண்டு குழந்தைகளாவது ஒருத்தி பெற்றால்தான் பெண்மை பலித்ததற்குச் சான்றாகுமாம். அதுவும் எப்படி?

“ரோஜா மாதிரி ஒரு பெண்; ரத்தினம் மாதிரி ஒரு பிள்ளை!”

ரத்தினசாமி திடுக்கிட்டான்: அவள் வேண்டுமென்றே அவனை ஜாடையாகக் குறிப்பிட்டுத்தான் பேசினாளோ? என்ன! குறும்பு!