பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
விடியுமா?

ந்தியைக் கண்டு எல்லோரும் இடிந்து உட்கார்ந்து போனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லைபோல் இருந்தது.

“சிவராமையர் டேஞ்ஜரஸ்” என்ற இரண்டு வார்த்தைகளே இருந்தன. தந்தி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருந்தது.

என் தமக்கை இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சென்னையிலிருந்து வந்தாள். அப்பொழுது எங்கள் அத்திம்பேர் நன்றாகக் குணமடைந்துவிட்டார். ஷயத்தின் சின்னம் கொஞ்சங் கூட இல்லையென்று பிரபல வைத்தியர்கள் நிச்சயமாகச் சொல்லிவிட்டார்கள்.

ஓங்கித் தலையில் அடித்ததுபோலக் குஞ்சம்மாள் பிரமை தட்டிப்போய் உட்கார்ந்திருந்தாள்.

எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. “இருக்காது!”, “ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்!” என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. இருக்கும்! என்ற கட்சி மூலை முடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.

தந்தியில் கண்டிருந்ததைத் திரும்பத் திரும்பப் படித்தோம். அதில் ஒன்றும் பிசகு இருக்கவே முடியாது. சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து தான் வந்திருந்தது; சந்தேகமில்லை. காலையில் அடித்திருக்கிறார்கள்; குஞ்சம்மாள் பேருக்குத்தான். தவறு எப்படியிருக்க முடியும்?

ஆனால், இவ்வளவு சிக்கிரத்தில் என்ன நேர்ந்திருக்க முடியும்? மூன்று நாட்களுக்கு முன்புதானே கடிதம் வந்தது? ஏதாவது உடம்பு செளகரியமில்லாமல் இருந்தால் அதில் எழுதாமல் இருப்பாரோ?

என் தமக்கையும், நானும் சாயந்திரம் ரயிலில் சென்னைக்குப் புறப்பட்டோம். அதுதான் அன்று கும்பகோணத்திலிருந்து சென்னைக்குப் போகும் முதல் வண்டி.