பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

பொதுவாக தஞ்சைப் பகுதியில் இசை, நாட்டியக் கலைகளும், நெல்லைச் சீமையில் இலக்கியக்கலையும் தம் சிகரங்களைத் தொட்டிருக்கின்றன என்று சொல்வர். ஆனால் தஞ்சை சிறுகதைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது காவிரிக்கரையில் கதைகளுக்கும் பஞ்சமில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த நினைப்பை நிஜமாக்கியவர் சோலை சுந்தரபெருமாள். அவரது இந்த முதல் முயற்சியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இது எனக்கும் நெல்லைக் கதைகளைத் தொகுக்க வேண்டும் என்ற ஆசையைத் தந்துள்ளது. எனக்கு மட்டுமென்ன எவருக்கும் தம் மண் சார்ந்தோர் கதைகளைத் தொகுக்கத் தான் தூண்டும். அவ்வகையில் சோலை சுந்தரபெருமாள் செய்த காரியம் பெரிய காரியம்.

இவரை முதலில் இவரது கதைகள் மூலமே அறிவேன். இன்றுவரை நேரிலும் பார்த்ததில்லை. இவர் திடீரென்று ஒருநாள் “இதுபோல் தஞ்சைப் பகுதி சிறுகதைகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். காவ்யா இதனை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். உங்கள் பதில் என்ன?” என்று கடிதம் எழுதினார். நான் யோசிக்கவே இல்லை. உடனே சம்மதித்துவிட்டேன். இதுபோன்ற எண்ணம் ஏற்கனவே எனக்குள் தோன்றியதுண்டு. முயற்சியில் இறங்காமல் இருந்தேன். இதை ஒருவர் செய்து முடிக்கிறார் என்றதும் எனக்குள் பரவசம். இன்று நூலாக உங்கள் கைகளில்....

இம்முயற்சியில் பல விஷயங்கள் பராட்டுவதற்குரியவை. ஒன்று, இத்தனை எழுத்தாளர்களையும் இனம் கண்டுகொண்டது. இரண்டு, ஒவ்வொருத்தர் கதைகளிலும் ஒன்றைத் தேர்ந்தெடுத்தது. மூன்று, இதற்காக அவர்களை அணுகி அனுமதி பெற்றது. நான்கு, ஒவ்வொரு எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்திய விதம், ஐந்து, இவரது வெளியீட்டுக்கான விடாமுயற்சி.