பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

தஞ்சை மாரட்டிய


உதவியாக இருக்கச் செய்து, பல சர்தார்களுடன் முஸ்தஃபகானைப் பார்க்கச் சென்றார். பத்துப் பதினைந்து நாட்கள் யோசனை பண்ண வேண்டுமென்று முஸ்தஃபகான் சொல்லிப் பக்கத்திலேயே ஒரு கூடாரத்தில் ஷாஜியைத் தங்கி இருக்குமாறு செய்தார். ஒரு நாள் இரவு முஸ்தஃபகான், ஷாஜியிருந்த கூடாரத்தைச் சுற்றிக் கொள்ளச் சர்தார்களுக்கு ஆணையிட்டார். அப்பொழுது நடந்த போரில் ஷாஜி காயம் பட்டுக் கீழே மூர்ச்சையாய் விழுந்தார் முஸ்தஃபகான், மூர்ச்சை தெளியச் செய்து. ஷாஜியை விஜயாபுரத்துக்கு அனுப்பினார்.

4. இதனையறிந்த சம்பாஜி முஸ்தஃபகானுடன் போர் செயத் தொடங்கினார். சிவாஜி யிதனை யறிந்து அல்லியேதில்ஷா பேரில் போர்க்குச் செல்ல நினைத்தார். இவற்றையறிந்த அல்லியேதில்ஷா, மூன்று சர்தார்களைச் சிவாஜியிருக்கும் புரந்தர்க்கோட்டைக்குச் சென்று சிவாஜியைச் சிறைப்படுத்திக் கொணருமாறு ஏவினார். அம்மூவரும் முதலில் சிரோபலம் என்ற கோட்டையைப் பிடித்து, அவர்களுள் ஒருவராகிய பல்லாளனை அங்கு இருக்கச் செய்து பத்தேகான் முசேகான் ஆகிய மற்ற இருவரும் சிவாஜியிருந்த புரந்தர்க் கோட்டையைச் சுற்றிக் கொண்டார்கள், சிரோபல் கோட்டையை விடுவிக்குமாறு பீமன் என்பவரைச் சிவாஜி அனுப்பினார். பீம சேனாபதி, பல்லாளனைக் கொன்று. சிரோபல் கோட்டையைப் பிடித்துக் கொண்டு, சிவாஜியிடம் வந்தார். சிவாஜி தன் எதிரிகளோடு கடுமையாகப் போர் செய்தார்; கோட்டையின் பேரிலேறி வந்த சேனையைத் துரத்தினார். இரண்டாம் விசை அவர்கள் கோட்டை வாசலருகில் வந்த பொழுது, சிவாஜி எதிரிகளில் முசேகானைக் கொன்றார்.

சித்திரகல் கோட்டையிலே இருந்தவர், விச்சகத்தி பரமா என்பவர் ஆவர். இவருக்கு வலது பக்கம் மூவாயிரம் குதிரைக்காரர்; இடதுபக்கமும் மூவாயிரம் குதிரை. இவர் இவற்றுடன் வந்து பீஜாபூர்க்கோட்டையைக் கொள்ளையடித்துக்கொண்டு சென்றார்.

இவற்றை யெல்லாம் அறிந்த அல்லியேதில்ஷா, ஷாஜியை விடுதலை பண்ணுவதே தகுந்தது என்று கருதி, அவரை அழைப்பித்து, நடந்தவற்றை மறக்குமாறு சொல்லி, அவரை விடுதலை செய்து, சம்பாஜியையும், மற்றுமுள்ள குடும்பத்தாரையும் பெங்களுரிலிருந்து சாத்தாராவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும், சிவாஜி, சிம்ஹகட் கோட்டையைவிட்டு விட வேண்டு மென்றும், சித்திரகல் துருக்கத்துப் பரமாவை அடக்க வேண்டுமென்றும் கூறினார். அங்ங்னமே ஷாஜி பெங்களுரை விட்டுவிட்டார்; சம்பாஜி ஏகோஜி மற்றுமுள்ள குடும்பத்தார் யாவரையும் சாத்தாராவுக்கு வருமாறு செய்தார்; சிம்ம கெடியையும் விடுவித்தார்; சித்திரகல்லுக்குச் சென்று, பரமாவுடன் போர் செய்து கொன்று, பரமாவின் தலையைப் பரமாவின் விருதுகளுடன் அல்லியே தில் ஷாவிடம் கொணர்ந்து வைத்தார். அல்லியேதில்ஷா எல்லாவிருதுகளையும் ஷாஜிக்கு அளித்தார். ஷாஜி சாதாராவுக்குப் போய்ச் சேர்ந்தார்.