பக்கம்:தந்தை பெரியார், நீலமணி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

தந்தை பெரியார்



மதுரையில் மில் தொழிலாளர்கள் வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. மதுரையில் மில் தொழிலாளர் சங்கத்திற்கு ஈ.வே.ரா. தலைவர். இவ்வழக்கை நடத்திய டாக்டர் வரதராஜுலு நாயுடுவும் மில் தொழிலாளர்களுக்காக வாதாடும் இராசகோபாலாச்சாரியாரும் மதுரை போகும் வழியில் ஈ.வே.ரா.வின் வீட்டில் தங்குவார்கள்.

அப்போது இராசகோபாலாச்சாரியார் ஈ.வே.ரா.வைப் பற்றித் தாம் கொண்டுள்ள விருப்பத்தை நாயுடுவிடம் கூறினார்.

வரதராஜுலு நாயுடும் அது நல்லதே என்று எண்ணினார். உடனே நாயுடு ஈ.வே.ரா.விடம்,

"ஈ.வே.ரா. நீங்கள் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டு செய்யுங்களேன். உங்களுடைய திறமையான சேவை நாட்டுக்கும் பொது மக்களுக்கும் பயன்படட்டுமே” என்றார்.

இராசகோபாலாச்சாரியாரும் எடுத்துக் கூறினார்.

காங்கிரஸ் மீதும் காந்திஜி மீதும் முன்னரே மதிப்புக் கொண்டிருந்த ஈ.வே.ரா. தன் இரு நண்பர்களின் அழைப்பை மறுக்காமல் காங்கிரசில் சேர்ந்தார்.

மதுரை மில் வழக்கில் தொழிலாளர்களே வெற்றி பெற்றனர். ஈ.வே.ரா.வின் புகழ் ஓங்கியது.

அதுவரைத் தனி மனிதராக நின்று தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சேவை செய்து வந்த ஈ.வே.ரா. தன்னை ஒரு தேசிய நீரோட்டமுள்ள கட்சியுடன் இணைத்துக் கொண்டு முன்னிலும் அதிக உற்சாகமாகச் செயல்படலானார்.