பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்



 
8. கடந்தார் 
உடல் வெளிநாட்டில் உயிர் தமிழ்நாட்டில் - கடல் கடந்து வாழும் தமிழர்க்குத் தலைவர் பெரியாரைக் காணத் தணியாத ஆவல் - மலேயா பின்னர் மேற்கு நாடுகள், இலங்கை சுற்றுப் பயணங்கள் - தாயகத்தில் சுயமரியாதை - மாநாடுகள் தொடர்ச்சி - அகில உலக அறிமுகம் - 1929 முதல் 1932 வரை

லேயாவிலும் சிங்கப்பூரிலும் வாழ்கின்ற தமிழர்கள் எத்தனையோ தலைமுறைகளுக்கு முன் அங்குக் குடியேறியவர்கள். ரப்பர் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் உழைத்துப் பிழைத்து வருவோரும், வாணிகம் செய்வோரும், அலுவல் பார்ப்போருமாக இந்திய மரபினைச் சார்ந்தோரில் அதிகமானவர் தமிழர்களே ஆவர். இவர்கள் அங்குள்ள சுதேச மக்கள், சீனர், ஜப்பானியர், ஆங்கிலேயர், முஸ்லிம்கள், ஈழநாட்டவர் ஆகியோருடன் நல்ல முறையில் இணக்கமான சூழ்நிலையில், பின்னிப் பிணைந்து பழகி வந்தவர்கள். எனவே இவர்கள் அனைவருமே இணைந்து ஈ.வெ. ராமசாமிப் பெரியாரை மலேயா சிங்கப்பூர் நாடுகளுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

பெரியாரின் வெற்றிக்கு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமல்லாது. மற்றொரு காரணமாயிருப்பவர் அவரை எதிர்ப்போரேயாவர். அதே முறையில் மலேயாவிலுள்ள யாரோ சில பழைமை விரும்பிகள், ஆதிக்கச் சுரண்டல்காரர்கள் பெரியாரைப் பற்றித் தவறாகப் பிரச்சாரம் செய்து அரசுக்கும் அவரை அனுமதிக்கலாகாது என அறிவுறுத்தி, ஆனவரையில் தடுப்பதற்கு முயன்று, மூக்கறுபட்டார்கள். “தமிழ்நேசன்” பத்திராதிபரான அய்யங்கார் இதில் ஒருவர். அழைப்பாளர்கள் கொடுத்ததுபோல், வரவேண்டாம் என்று பொய்த் தந்தியும் கொடுத்துப் பார்த்தார்கள். ஆட்களிடம் 500 வெள்ளி தந்து ஆளையே தீர்த்து விடும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் வதந்தி பரவியிருந்தது.