பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

108


வருபவர் தேசத் துரோகி, மதத்துவேஷி, நாத்திகர்! அவரை யாரும் வரவேற்கக்கூடாது; என அவர்கள் மலேயா, சிங்கப்பூர் நாடுகளில் பெருத்த விளம்பரம் செய்தனர். வரவேற்பாளரைவிட எதிர்ப்பாளர் பலமான ஏற்பாடுகள் செய்திருந்தனர். இதனால் இருமடங்கு ஆவலுடன் பல்லாயிரம் மக்கள் கூட்டம் பினாங்குத் துறைமுகத்தில் காத்திருந்தது.

1929-ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 15-ஆம் நாள் பெரியார், தமது துணைவியார் நாகம்மையார், நண்பர்களான எஸ். இராமநாதன், சாமி சிதம்பரனார், அ. பொன்னம்பலனார், மாயூரம் நடராசன், நாகை காளியப்பன் ஆகியோருடன் நாகைப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலில் ஏறினார். 20-ஆம் நாள் பினாங்கில் இறங்கிய போது, மலாயா வாழ் பெருமக்கள் லட்சக் கணக்கில் திரண்டு வரவேற்றனர். வேறெந்த இந்தியத் தலைவரும் காணாத பெரு வரவேற்பு! மாலைகளும் வாழ்த்து மடல்களும் எண்ணிலடங்கா; பத்திரிகைகள் பிரமாதமாகப் பாராட்டி எழுதின! 23-ஆம் நாள் ஈப்போவில் தமிழர் சீர்திருத்த மாநாட்டைப் பெரியார் துவக்கி வைத்தார். தமிழர் மாத்திரமன்றித் தெலுங்கர், மலையாளிகள், யாழ்ப்பாணத் தமிழர், முஸ்லிம் பெருமக்கள் அங்கு ஏராளமாகக் குழுமியிருந்தனர். அடுத்து, 26 ஆம் நாள் சிங்கப்பூர் சென்று, மலேயா இந்தியச் சங்க மாநாட்டிலும் விரிவுரை நிகழ்த்தினார்.

அந்த நாடுகளில் இந்த நாட்டைபோலச் சாதி-மதச் சண்டைகள் இல்லையெனினும், மூட நம்பிக்கைகள், அறிவுக்குப் பொருந்தாத குருட்டுப் பழக்க வழக்கங்கட்குக் குறைவில்லை. பலபேர் பெரியார் என்றால் துறவி இராமசாமியென்றே கருதிக் காலில் வீழ்ந்து வணங்கினர். அவர்களுக்கெல்லாம் பகுத்தறிவு விளக்கங்களைப் பெரியாரும் குழுவினரும் தாராளமாகவும் ஏராளமாகவும் வழங்கினர். அவர்கள் கேட்ட அய்யவினாக்களுக்கெல்லாம் தயங்காமல் மயங்காமல், அறிவுபூர்வமான தெளிவான பதிலுரைகள் வழங்கினார். மக்களிடையே பேதங்கள் ஒழிந்து சுயமரியாதை பெருக வேண்டும் என்ற குறிக்கோளை எடுத்துரைத்தனர். எதிர்ப்பாளரும் மனநிறைவடைந்து அமைதி பெற்றனர்.

சிங்கப்பூரில் “தமிழ்முரசு” ஏடு நடத்தி வந்த திருவாரூர்க்காரர் கோ. சாரங்கபாணி பெரியாரின் சிறந்த நண்பரானார். மலேயாவிலுள்ள பற்பல பெரிய ஊர்களுக்குப் பெரியாகும் குழுவினரும் சென்று பிரச்சாரம் புரிந்தனர். பினாங்கு, ஈப்போ , கோலாலம்பூர், கோலப்பிறை, கோலக்கங்சார், தைப்பிங், மூவார். ஜோகூர்பாரு, பத்துப் பகாட், மலாக்கா, தம்பின், கோலக்குபு, தஞ்சை மாலிம், சுங்கை குரூட், சுங்கை பட்டாணி, தெலுக்கான்சன், கம்மார் அகிய சுமார் எழுபத்தொரு இடங்களில் சொற்பொழிவுகளும், வரவேற்பு