பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


நிகழ்ச்சிகளில் உரைகளும் நிகழ்த்தி மாபெரும் எழுச்சியும், விழிப்புணர்ச்சியும் ஏற்படுத்தினார்கள்.

மீண்டும் 1930-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 11-ஆம் நாள் பினாங்கில் கப்பலேறி, 16-ஆம் நாள் நாகைப்பட்டினம் துறைமுகத்தில் வந்திறங்கினர். இந்த நேரத்தில்தான் பெரியாரின் தோற்றத்தில் முக்கியமானதொரு மாற்றம் நேர்ந்தது. அதுவரையில் முகத்தில் வெண்ணிறமான திண்ணிய மீசை மட்டும் வளர்த்திருந்த பெரியார், மலேயாவிலிருந்து திரும்பியபோது, வெண்மையான தாடியுடனும் காணப்பட்டார். தற்செயலாய் நேரிட்ட, சவரம் செய்து கொள்ள இயலாத நிலையைப் பிற்காலங்களில் தனக்கு மிகவும் சாதகமான அமைப்பாக்கிக் கொண்டார் பெரியார். அதாவது பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் குளிக்கவோ, பல் துலக்கவோ, தலை சீவவோ, சவரம் செய்து கொள்ளவோ துணி துவைக்கவோ, சலவை: உடுக்கவோ, அலங்காரம் மேற்கொள்ளவோ நேரம் செலவழிக்கக் கூடாது என்பது பெரியாரின் பிடிவாதமான கொள்கை. இதற்கு மாறுபடும் அவருடைய அணுக்கத் தொண்டர்கள் சிலர் அவரது கண்டனத்துக்கு ஆளாகியுள்ளனர்; நன்குணர்ந்த புத்திசாலிகள் தப்பித்துள்ளனர். பிடரியினைச் சிலிர்த்தெழும் அடலேற்றுச் சிங்கமெனப் பெரியார் மலேயா நாடுகளிலிருந்து திரும்பினார் கவர்ச்சி மிகு தோற்றத்துடன்!

அவரில்லாத காலத்தில் சென்னைக்கு மாற்றப்பட்டிருந்த “குடி அரசு”, “ரிவோல்ட்” இதழ்கள் மீண்டும் ஈரோட்டுக்கே கொண்டு வரப்பட்டன. ரிவோல்ட் இதழ் 1930ஆம் ஆண்டில் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டது. "குடி அரசு" இதழில் முன்னிலும் அதிகத் தீவிரத்துடன் பெரியார் எழுதி வந்தார். இந்த நேரத்தில்தான் காந்தியார் தமது உப்புச் சத்தியாக்கிரகம் எனும் புதிய போராட்டத்தைத் துவக்கியிருந்தார். 1930-ல், இந்தியாவிலிருந்து வெள்ளை ஆட்சியை விலகச் செய்திட ஒரு கருவியாக இந்த உப்புப்போர் கருதப்பட்டு, இதில் ஏராளமானோர் ஈடுபட்டனர். தென்னாட்டில் வேதாரண்யத்தில் உப்புப் போர் நடத்த இராஜாஜியும், சர்தார் வேதரத்தினம் பிள்ளையும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இரண்டுங்கெட்டான் நிலைமையிலிருந்த சில தமிழ் மக்கள் உப்புப் போர் மிக நியாயமானதே என்று நினைக்கவும் தொடங்கினர். இந்நிலையில், அதனை அடியோடு எதிர்த்துப் பெரியார் முழக்கமிட்டார். இந்தக் கொள்கையிலும், இதை நடத்துகின்ற தலைவர்களின் நாணயத்திலும் தமக்கு நம்பிக்கை இல்லை என்றார். இந்தியாவில் மத ஆதிக்கம், குருட்டு நம்பிக்கை, தீண்டாமை, பெண்ணடிமை, சாதி இழிவு, பார்ப்பன் ஆளுகை இவை யாவும் அடியோடு ஒழிக்கப் பட்டால்தான் பூரண சுயராஜ்யம் கிடைக்கும்; கிடைத்தாலும் நிலைக்கும் என்ற தமது கொள்கையை அழுத்தந்திருத்தமாக அஞ்சாது வெளிப்படுத்தினார் பெரியார்!