பக்கம்:தந்தை பெரியார், கருணானந்தம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்


500 ரூபாய் சம்பளத்துக்கு மேல் அரசு யாருக்கும் தரக்கூடாது என்று தீர்மானித்ததாகும். மேலும், யார் தூற்றினாலும் போற்றினாலும் கவலை கொள்ளாமல், சுயமரியாதை இயக்கம் அரசியலில் கலக்கக் கூடாது; சட்டமறுப்பு இயக்கங்களை ஆதரிக்கக் கூடாது: முழுமையான சமூக சீர்திருத்த இயக்கமாகவே நடைபெற வேண்டும் என்பது மற்றொரு முக்கிய தீர்மானமாகும். சுயமரியாதை இயக்கம் என்றைக்குமே மூடப் பழக்க வழக்கங்களையும், கடவுள் மதம் சாதி பார்ப்பான் பண்டிதனைக் கண்டித்துக்கொண்டு மட்டுந்தான் இருக்கும் என எண்ணிட வேண்டாம்; ஒருவன் உழைப்பில் மற்றவன் நோவாமல் சாப்பிடுவதும்: ஒருவன் கஞ்சிக்கு அலைய, மற்றவன் அய்ந்து வேளை சாப்பிட்டுச் சாய்ந்து ஓய்ந்து கிடப்பதும்; ஒருவன் கந்தை யணிவதும் மற்றவன் மூன்று உடுப்பு அணிந்து திரிவதும்; பணக்காரர்கள் செல்வம் முழுவதும் தங்களது சுக வாழ்வுக்கு மட்டுமே என எண்ணுவதும் இனி நடக்காது - என்ற சமதர்மக் கருத்தையும் பெரியார் ஈரோடு மாநாட்டில் பிரகடனம் செய்துவிட்டார்! இந்தப் புதிய பொருளாதாரத் திட்டம் மேலும் பல இளைஞர்களை இயக்கத்தின்பால் ஈர்த்தது.

பகத்சிங் தூக்கிலிடப்பட்டபோது - ஆங்கிலேய அடக்குமுறைக்கு அஞ்சிப் பிறதேசபக்தர் வாய்மூடிக்கிடக்கபோக - பெரியார். “அவர்தான் யோக்கியமான மனிதர்; அவர் மேற்கொண்டதுதான் சரியான மார்க்கம்” என்று பாராட்டி 1931 மார்ச் 29-ஆம் நாள் "குடி அரசு" இதழில் எழுதினார்.

அடுத்ததாக, விருதுநகரில் 1931-ஆகஸ்டில் மூன்றாவது மாகாண சுயமரியாதை மாநாடு ஆர்.கே. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. வே.வ. இராமசாமி வரவேற்புக் குழுத்தலைவர். இங்கு செங்கற்பட்டு, ஈரோடு மாநாடுகளின் தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப் பெற்றன. கதர் கைத்தொழில் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்றவை அல்ல; எனவே இயந்திர சாதனங்களே தொழில் வளர்ச்சிக்கு உகந்தவை என்பதாக ஒரு தீர்மானம் இங்கே இயற்றப்பெற்றது குறிப்பிடத் தக்கதாகும்.

மார்க்ஸையும் லெனினையும் அறிந்துகொள்ளாமலே, பெரியார் தமது கூர்த்த மதியினால், 1900 ஆண்டிலேயே, தமது 21-ஆவது வயதில், தாம் தீவிரமாக மண்டி வணிகத்தில் ஈடுபட்டிருந்த காலையில் தொழிலாளர்க்குத் தொழிலில் பங்கு என்ற திட்டத்தை மேற் கொண்டிருந்தார். இலாபத்தை மூன்றாகப் பிரித்துத் தனக்கு ஒரு பாகம், தன் முதலுக்கு வட்டியாக ஒரு பாகம், தொழிலாளிகளாகிய உழைக்கும் கூட்டாளிகளுக்கு ஒரு பாகம் எனப் பிரித்துக் கொடுத்தார். அது நன்கு செயல்பட்டதால், அதுவே தொழிலாளர் பிரச்சனை தீர்க்கும் வழி என்பதைத் தனது கொள்கையாய்க் கொண்டு பிரச்சாரமும் செய்து வந்தார். இப்படியாகச் சமுதாயத்திலிருந்து, பொருளாதார சம்பந்த-